ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து கமலுக்கு பணமா? சந்தேகம் கிளப்புகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரிவினைவாதத்தோடு பேசும் கமலஹாசனுக்கு ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பணம் வருகிறதா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று முன்தினம் பேசிய கமலஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதை சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதை சொல்கிறேன் என்றார்.

 

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியது. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும், அவருக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும் என்றார்.

 

 

இந்த விவகாரத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்; அப்படி அவர் கேட்டால், கமல் நாக்கை அறுக்கவேண்டும் என்று பேசிய எனது கருத்தை திரும்ப பெறுகிறேன். பிரிவினைவாதத்தோடு கமல் பேசுவதால் மக்கள் நீதி மய்யத்தை தடை செய்ய வேண்டும்.

 

கமலஹாசன் சொன்னதை சரி என்று சொன்ன தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர் ; அவர் இத்தாலிக்கு தான் செல்ல வேண்டும். அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பணம் கமலஹாசன் பணம் வாங்கிவிட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதற்கிடையே, கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதிமய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை ராஜேந்திர பாலாஜி மீறிவிட்டதாகவும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும், மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply