தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சூலூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
இப்பொது, 50 ரூபாய் செலவில் மனச்சுமை போக்குவதற்காக இருந்த கேபிள் டிவி கட்டணம், 250 ரூபாயாக உள்ளது.கேஸ் கட்டணம் 350 ரூபாயாக இருந்த நிலை மாறி 900 ரூபாயாக உயர்ந்துள்ளது. மோடி, ராணுவத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார். புல்வாமா தாக்குதல் குறித்தும்,இந்திய வீரர் அபினந்தன் விடுதலை குறித்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். அது உண்மை. தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது.
பிரதமர் மோடியை விட தரம் தாழ்ந்து பேசும் பிரதமரை இதுவரை பார்த்தது இல்லை. மதச்சார்பின்மை தான் நாட்டை காப்பாற்றும். உயர் மின் கோபுரம் திட்டத்தை அமைத்து கொங்கு நாட்டு மக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.நிச்சயம் வராது மோடியின் ஆட்சியும்,உயர் மின் கோபுர திட்டமும். செயில் கேஸ் திட்டம்,ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்து தமிழக வளங்களை கொள்ளையடிக்க மத்தியில் ஆளும் மோடி அரசு முயல்கிறது.
மோடிக்கு தமிழத்தில் வாக்கு கேட்க அருகதையில்லை,தகுதியில்லை. கமிஷன் பேரத்தால் தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவ வந்த தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களின் மூலம் கார்ப்பரேட் கம்பெனி காரர்களுக்கு கோடிக்கணக்கான பணம் கிடைக்கும். மத்திய அரசுக்கும் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். அதனை எதிர்க்கும் திராணி எடப்பாடி அரசுக்கு இல்லை. இவ்வாறு, வைகோ பேசினார்.