பஞ்சாயத்துகளை எல்லாம் பேசித் தீர்த்து, ஒருவழியாக அயோக்யா படத்தை நடிகர் விஷால் ரிலீஸ் செய்துவிட்டார்.
நடிகர் விஷால் நடிப்பில், வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவான படம் அயோக்யா வெளியாகிறது. மே 10ஆம் தேதி வெள்ளியாக வேண்டிய இப்படம், திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்த ரசிகர்கள், திரையரங்கிற்கு வந்தும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த படத்திற்கு பிரச்சனை எப்படி எழுந்தது? தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான் அயோக்யா. இப்படத்தை தயாரித்த மது, படத்தின் தமிழ் ரீமேக்கை பெற்று படமெடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக அனைத்து மொழி உரிமையை மனிஷ் என்பவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தான், தமிழில் மட்டும் தனியாக எப்படி உரிமை வழங்க முடியும் என்று பஞ்சாயத்து கிளப்பினார், மனிஷ். சட்டப்படி அயோக்யா படமும் எனக்கு தான் சொந்தம் என்ற அவரால் தான், கடைசி நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.
படத்தை எப்படியும் ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால், முந்தைய நாள் இரவு துவங்கிய பேச்சுவார்த்தை, மறுநாள் பகல் வரை தொடர்ந்தது. விஷால் கடும் முயற்சி எடுத்தும் எந்த பலனுமில்லை. மூன்று கோடி வரை அந்த தயாரிப்பாளர் கேட்டதாக தெரிகிறது.
அயோக்யா தயாரிப்பாளரான மதுவும், விஷால் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால், எதுவும் பேசாமல் விஷால் சென்றுவிட்டார். போனையும் ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறார். வெள்ளிக்கிழமை மாலை வரை பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
இந்நிலையில் பட வெளியிடும் நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாக முதலில் படத்தை வெளியிடுவோம். அதன் பிறகு, பணம் யார் தரவேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்று பேசி முடித்திருக்கிறார்கள். ஒருவழியாக பிரச்சனைகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து, ஒருவழியாக சனிக்கிழமையன்று, அயோக்யா படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.