முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் உள்ளதாக, அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மதுரையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது, வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும். வரும் 23ஆம் தேதி, தோல்வியோடு அமைச்சர்கள் அனைவருமே காணாமல் போவார்கள். அவர்கள், வேறு வழியில்லாமல் பாரதிய ஜனதாவில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
தற்போது, முதல்வர் இ.பி.எஸ். மற்றும் துணை முதல்வராக உள்ள ஓ.பி.எஸ் இடையே மோதல் இருந்துவருகிறது. சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதியிலும் அ.ம.மு.க வெற்றி பெறும். டி.டி.வி.தினகரன் தலைமையிலான நல்லாட்சி அமைவதற்காக, தற்போதைய ஆட்சியைக் கலைக்கிறோம்.
இது, துரோகிகளின் கூட்டணி ஆட்சி. கட்டுக்கடங்கா ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாகக் கொண்டு இந்த ஆட்சி நடைபெறுகிறது. தி.மு.க-வோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைப்பதற்காக, சட்டப்பேரவையில் தி.மு.க.வோடு ஆதரவு அளிக்க கூட்டணி வைத்த ஓ.பி.எஸ் தான் அழியப்போவது உறுதி.
அ.தி.மு.க-வினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்னை உருவாக்க முயல்வதால், அதனைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு யாரும் கேட்கவில்லை. ஆனால், மறு வாக்குப்பதிவு நடக்கும்போதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓ.பி.எஸ். மகனின் வேட்புமனுவில் பிரச்னை இருப்பதாக ஏற்கெனவே புகார் அளித்துள்ளோம் என்று அவர் கூறினார்.