தண்ணீரை தேடி கண்ணீரோடு அலையும் மக்கள்! கருணை காட்டாத அரசால் தொடர்கிறது சிக்கல்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கா. மகேந்திரன்


இராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது; தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் அவலத்தை போக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

 

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக உள்ளது, இராமநாதபுரம். விவசாயம் மீன்பிடி தொழிலே, இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. இம்மாவட்டம் வறட்சியின் பிடியில் எப்போது சிக்கித் தவிக்கிறது.

 

தற்போது கோடிய என்பதல், குடிநீருக்காக பொதுமக்கள் இரவு பகலாக ஆங்காங்கே குடங்களுடன், குழந்தைகளுடன் தள்ளுவண்டியுடன்  அலையும்  பரிதாபநிலை காணப்படுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களில் கசியும் தண்ணீரையும், சுகாதாரமற்ற முறையில் கிடைக்கும்  தண்ணீரையும், பலமணி நேரம் காத்திருந்து  எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது.

 

குறிப்பாக, திருப்புல்லாணி, மோர்க்குளம், பொக்கனாரேந்தல், ஆணைகுடி , ராஜசூரியமடை உள்ளிட்ட கிராமங்களில், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மோர்க்குளம்  பகுதியில் குடிநீருக்காக கடந்தாண்டு பல லட்சம் செலவில்   போடப்பட்ட குடிநீர் அடிபம்புகள் செயலிழந்து காட்சிப் பொருளாகிவிட்டன.

 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில், கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க காவிரி குடிநீர் வடிகால் வாரியம்  மூலம், ரூ. 4  கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்து அனுப்பி, ஆறு மாதங்களாகியும், இதுவரை அதிகாரிகளால் நிதி ஒதுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, எந்த பணியும் நடக்க வில்லை.

 

 

எனவே, வறட்சியால்  சிக்கி தவிக்கும்  இராமநாதபுரம்  மாவட்டம் மீது, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சிறப்பு கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.