6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை எளிதாக வென்று ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


ஐபிஎல் தொடரின், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

 

மகேந்திர சிங் தோனி டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான, ஐ.பி.எல். கிரிக்கெட் 2வது தகுதி சுற்றுப்போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைப்பெற்றது.

 

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய பிரித்வி ஷா 5 ரன்களும், ஷிகார் தவான் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த காலின் மன்ரோ 27ரன்களுக்கும், ரிஷப் பாண்ட் 38 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

 

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

அடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, சென்னை அணி, தொடக்கத்தில் நிதானமாக விளையாடியது. அதன் பிறகு, தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளஸ்சிஸ், வாட்சன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்; இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்து ஆட்டமிழந்தனர்.

 

டு பிளஸ்சிஸ் 37 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த வாட்சனும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

 

19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்த சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

 

ஆட்டநாயகனாக டு பிளஸ்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, கோப்பையை வெல்லும்.


Leave a Reply