அலட்சியத்தால் உயிரிழந்த 5 நோயாளிகள்! அரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


முறையாக பராமரிக்காத ஜெனரேட்டரால், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் செயல் இழந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

 

மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. அதை தொடர்ந்து மின் தடை உண்டானது. இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள ஜெனரேட்டர், முறையாக பராமரிக்காததால், அதுவும் இயங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

 

இதனால், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் செயல் இழந்தது. வெண்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்த நோயாளிகள் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில், மேலூர் பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்ட 5 பேர் அடுத்தடுத்து மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

அதன் பிறகே, யூபிஎஸ் பேட்டரிகள் கொண்டு வந்து வெண்டிலேட்டரை செயல்பட வைத்ததால், மற்ற நோயாளிகள் காப்பாற்றபட்டதாக கூறப்படுகின்றது. வென்டிலேட்டர் இயங்காததால், 5 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

ஆனால், அரசு மருத்துவமனை டீன் வனிதாவோ, சுவாசக் கருவி இயங்காமல் போனதால், யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறி, தவற்றை நியாயப்படுத்த பார்க்கிறார். வேறு மருத்துவமனைகளில் இருந்து ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டவர்கள் நோயின் தன்மையால் உயிரிழந்ததாக, அவர் விளக்கம் தந்துள்ளார்.

 

அரசு மருத்துவமனைகளில் மின் தடை ஏற்பட்டால், ஜெனரேட்டர்களை இயக்க, அதை பராமரிக்கப்பதற்கு, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனித்தனி குழு உள்ளது. ஆண்டுக்கு ஒரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் பராமரிப்பு, டீசல் செலவுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

 

அப்படியிருந்தும், அதிகாரிகளின் அலட்சியத்தால், ஆனால் மதுரையில் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் கடந்த ஓராண்டாக செயலிழந்தே இருந்துள்ளது. இந்த மெத்தனப்போக்கு, அப்பாவி உயிர்கள் 5 பேரை காவு கொண்டுள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து, தவறு புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே, இதுபோன்ற மரணங்கள் இனி நிகழாமல் தடுப்பதற்கான வழியாகும்.


Leave a Reply