‘நியூஸ் 18’ நிருபர் குழு மீது போலீஸ் தாக்குதல்! அத்துமீறல் தொடர்வதை முதல்வர் தடுப்பாரா?

திருப்பரங்குன்றத்தில், முதல்வரின் பிரசாரத்தை படம் பிடிக்க சென்றபோது, நியூஸ் 18 டிவி செய்தியாளர்களை, போலீசார் சிலர் தாக்கி கேமராவை பறிக்க முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் இதுபோன்ற சம்பவங்களை முதல்வர் தடுக்க வேண்டும்.

 

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களும் சென்றனர். ‘நியூஸ் 18’ டிவி செய்தியாளர் குழுவும், காரில் சென்றனர்.

 

சிந்தாமணி சந்திப்பில் முதல்வர் பேசிக்கொண்டிருந்த போது, அடுத்த இடமான வலையங்குளத்திற்கு செல்ல ‘நியூஸ் 18’ குழு ஆயத்தமானது. பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்த போது, வாகனங்களை போக்குவரத்து போலீசார் மறித்தனர். மற்ற வாகனங்களுடன், ‘நியூஸ் 18’ டிவி வாகனமும் நின்றது.

 

போலீசாரின் பணியை கருதி, அடுத்து நகராமல் அங்கேயே நின்றனர். வழியில் வரும் முதல்வரை படம் பிடிக்க, ‘நியூஸ் 18’ ஒளிப்பதிவாளர் ராம்குமார், கேமராவை எடுத்து சாலைக்கு வந்தார். அப்போது, அவரை மறித்த கீரைத்துறை ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் (குற்றம்), கேமரா உடன் தள்ளிக்கொண்டு அடித்து இழுத்து சென்றார்.

 

மேலும், கேமராவை ஆப் செய்யுமாறு, கடுமையான வார்த்தைகளால் மிரட்டினார். இதை தடுக்க சென்ற தலைமை செய்தியாளர் ஸ்டாலினையும் திட்டி, இருவரையும் சிறைபிடித்தனர். ஒளிப்பதிவாளரை சட்டையுடன் பிடித்து இழுத்ததில், அவரது நேரலை பிஎன்சி கேபிள் அறுந்தது.

 

அசாதாரண சூழல் குறித்து உடனடியாக செய்தியாளர் ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் தெரிவித்தார். அவர்களும், சம்மந்தப்பட்ட ஆய்வாளரை தொடர்பு கொண்டு, செய்தியாளர்கள் இருவரையும் விடுவிக்க கூறினர். ஆனாலும் ஆய்வாளர் அதை கேட்கவில்லை.

 

மாறாக, ‘நான் கூறிய பின் எப்படி கேமராவை ஆப் செய்யாமல் இருந்தாய்?’ எனக்கூறியதுடன், நெல்லையில் இப்படி தான் செய்தியாளர்களை கதற வைத்தேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று, தொடர்ந்து மிரட்டினார். இருவரையும் கைது செய்துள்ளதாகவும், ஜிப்பில் ஏறும்படி கூறினார்.

 

பின்னர், இருவர் பெயரையும் குறித்து கொண்ட அவர், “நீங்க போங்க பின்னாடியே எப்ஐஆர் போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன்” என்று அச்சுறுத்தியதாக, இருவரும் கூறினார். இதை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் பார்த்து கொண்டிருந்தனர்.

 

இதுபோன்ற சில காவல்துறை அதிகாரிகள், செய்தியாளர்களை குறிவைத்து தாக்குவது, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் நிகழ்ச்சியில், அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் இதுபோல் சிலர் நடந்து கொள்கின்றனரா என்ற சந்தேகமும் எழுகிறது.

 

இந்த தாக்குதல் சம்பவத்தை, குற்றம் குற்றமே வார இதழ் மற்றும் குற்றம் குற்றமே இணையதளம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள ஊடகத்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே, செய்தியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.


Leave a Reply