கருணாநிதி நினைவிடம் கட்ட இடம் கொடுக்காதவர்களுக்கு, ஆட்சியில் இடம் கொடுக்கலாமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, செலக்கரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது,அவர் பேசியதாவது:
சூலூர் பகுதிகளில் நிலவி வரும் கடும் வறட்சியை போக்க, நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நொய்யல், உப்பாறு நீரை சுத்திகரிப்பு செய்து குளம்,கு ட்டைகளில் நிரப்பி நிலத்தடி நீர்மட்டம் உயத்தப்படும். தீரன் சின்னமலை, பொன்னான் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன், 50 ஆயிரம் பேருக்கு மக்கள் நலப்பணியாளர் பணி, 5 பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மொத்தம் 22 எம்.எல்.ஏக்களை பெறுவோம். தற்போது உள்ள 97 இடங்களையும் சேர்த்து 119 இடங்களுடன், திமுக ஆட்சி நிச்சயம் இத்தேர்தலில் வரும். இனி எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற மோடியைப்போல் முட்டு குடுக்க ஆள் இல்லை.
கருணாநிதி மறைந்த நேரத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, ஆட்சியில் இடம் கொடுக்கலாமா? இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, பட்டணம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்டாலின், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பெண் குழந்தை ஒன்றிற்கு கண்மணி என்றும்,ஆண் குழந்தைக்கு அன்பழகன் எனவும் பெயர் சூட்டினார்.