மார்ட்டின் குடும்பத்தாரால் என் உயிருக்கு ஆபத்து! டிஎஸ்பி-யும் மிரட்டுவதாக இறந்த காசாளரின் மனைவி பகீர் தகவல்!!

லாட்டரி மார்ட்டின் குடும்பத்தாரிடம் இருந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, மர்மமாக இறந்துபோன காசாளர் பழனியின் மனைவி சாந்தாமணி, மேற்கு மண்டல ஐ.ஜியிடம் மனு அளித்தார்.

 

தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்கள் சோதனை நடத்தி, கணக்கில் வராத பலகோடி ரூபாயை கைப்பற்றினர். இதற்கிடையே, வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகி திரும்பிய காசாளர் பழனிசாமி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக, குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். இது தொடர்பாக, வருமான வரித்துறையினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

 

இந்த நிலையில், இறந்து போன காசாளரின் மனைவி சாந்தாமணி, கோவையில் இன்று மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யாவிடம் புகார் மனு அளித்தார். அதில் பழனிசாமி மரணம் தொடர்பாக மார்டின் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

 

பழனிசாமியை சாதி சொல்லி திட்டிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், மார்டின் நிறுவன உரிமையாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் சாந்தாமணி கூறியதாவது: பழனிசாமி மரணத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், மார்டின் நிறுவனத்தினருமே காரணம். ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எனது கணவரை விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதோடு, கழுத்தை நெறித்து ,கையை அறுத்துள்ளனர்.

 

ரூ. 3 கோடி தருவதாக காவல்துறை அதிகாரிகள் பேரம் பேசினர். எங்களது வீட்டை சீல் வைத்து விடுவேன் என, டி.எஸ்.பி மணி எங்களை மிரட்டுகிறார். பணம் வாங்கிக் கொண்டு விலகி விடுமாறு அவர் மிரட்டல் விடுக்கின்றார். டிஎஸ்பி மணி மீது ஐஜியிடம் புகார் அளித்துள்ளோம். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

 

 

மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் எங்களிடம் நேரடியாக பேசவில்லை. ஆனால், டிரைவர் மூலமாக வருமான வரித்துறை மீது புகார் கொடுக்க சொல்லி மிரட்டுகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் தான், மார்ட்டின் நிறுவனத்தினர் அடித்து கொலை செய்துள்ளனர்.

 

மார்டின் நிறுவன ஊழியர்கள் கென்னடி, ராஜா, பிரகாஷ்,வேதமுத்து, ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், மார்டின் நிறுவனத்தினர் மீதும், வருமான வரித்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

 

பேட்டியின் போது, பத்திரிகையாளர்களுக்கும் , சாந்தமணிக்கு ஆதரவாக வந்த அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், லேசான தள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.


Leave a Reply