ஈரானை எச்சரிக்க போர்க்கப்பல் அனுப்பிய அமெரிக்கா! வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்!!

மல்லுக்கட்டி நிற்கும் ஈரானை எச்சரிக்கும் வகையில், வளைகுடா பகுதிக்கு விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை, ஈரான் மீறுவதாகக்கூறி, கடந்தாண்டு அந்த ஒப்பந்ததை அமெரிக்கா முறித்துக் கொண்டு வெளியேறியது. எனினும், பிற ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தத்தில் நீடிக்கின்றன.

 

அதன் பின, ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. அத்துடன், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா, சீனா, தென்கொரியா, துருக்கி மீதான, பொருளாதாரத் தடை விதிவிலக்கை நிறுத்துவதாக, கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தது.

 

அமெரிக்காவின் தடைகளால், ஈரானின் பொருளாதாரம் மோசமடைந்தது. உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின. இதனால், ஈரான் – அமெரிக்க உறவு மோசமடைந்து, பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம்சாட்டி வந்தன.

 

இந்நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில், விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களை, ஈரான் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் சூழலில், இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

 

அமெரிக்கப் படையினர் மீதோ, அதன் நட்பு நாடுகளின் படையினர் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், தக்க பதிலடி தரப்படும் என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, ஈரானுடன் அமெரிக்கா சண்டையிட முனையவில்லை. ஆனால், ஏதாவது தாக்குதல் நடத்தினால், பதிலடி தருவதற்கு முழுவதுமாக தயாராக இருப்பதாக என்று விளக்கம் அளித்துள்ளது.


Leave a Reply