யாரையோ காப்பாற்ற சேலத்தில் ரவுடி பலிகடா? சந்தேகம், சர்ச்சைகளை கிளப்பிய போலீஸ் என்கவுன்டர்

யாரையோ திருப்திபடுத்துவதற்காக, சேலத்தில் ரவுடி கதிர்வேலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதாக, சந்தேகத்தை கிளப்பியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், இதுபற்றி மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் தேவாங்கூர் காலனியை சேர்ந்தவர் கதிர்வேல், 27. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதில், காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன், 31, கொலை வழக்கும் அடங்கும். கடந்த மாதம் 5ம் தேதி கணேசன் அடித்து கொலை செய்யப்பட்டார்.

 

இதுபற்றி விசாரிக்க, காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவ்வழக்கில், சுக்கம்பட்டி பழனிசாமி, 30, சின்னனூர் முத்து, 27 ஆகியோர் சரணடைந்தனர். அப்போது வாக்குமூலம் தந்த பழனிசாமி, ரவுடி கதிர்வேல், முத்து ஆகியோருடன் சேர்ந்து, கணேசனை கொலை செய்ததாக தெரிவித்தார். அதன் பேரில், ரவுடி கதிர்வேல் மற்றும் சிலரை காரிப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

 

எழுதி வாங்காமால் என்கவுன்டரில் கொன்ற போலீஸ்!

 

இவ்வழக்கில் நடந்தது பற்றி போலீசில் சென்று விளக்கி, சரணடைவதற்காக கதிர்வேல் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக நேற்று முன்தினம் (மே 1 ) மாலை சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த ரவுடி கதிர்வேலை போலீசார் பிடித்தனர். நடந்ததை வாக்குமூலமாக எழுதி வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தி, ரூரல் போலீசாரிடம் கதிர்வேல் ஒப்படைக்கப்பட்டார்.

 

அதன்படி, காரிப்பட்டி ஸ்டேஷனில், கதிர்வேலிடம் விடிய விடிய விசாரணை நடந்துள்ளது. கணேசனை கொல்ல பயன்படுத்திய ஆயுதங்கள், குள்ளம்பட்டியில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் வைத்திருப்பதாக கதிர்வேல் கூறியதாக போலிசார் கூறுகின்றனர். இதையடுத்து, நேற்று காலை ஜீப்பில் அங்கு அழைத்து சென்றனர். உடன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்ஐக்கள் மாரி, பெரியசாமி, ஏட்டு ராஜமாணிக்கம் இருந்துள்ளனர்.

 

 

சரணடைந்தவருக்கு சாவு தான் கிடைத்தது!

 

குள்ளம்பட்டி ஆலமரத்தடியில் வைத்து தான், கதிர்வேலை, நேற்று காலை, என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், எஸ்.ஐ. மாரி ஆகியோரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றதால், கதிர்வேலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. அப்பகுதியை சரக டிஐஜி செந்தில்குமார், எஸ்பி தீபா கனிக்கர், கூடுதல் எஸ்பி சுரேஷ்குமார் சென்று பார்த்தனர்.

 

காவு கொடுக்கப்பட்டாரா கதிர்வேல்!

 

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு என 8 வழக்குகள் உள்ளன. கணேசனை கொன்ற வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்தது, தாமாக முன்வந்து சரணடைய சென்ற கதிர்வேலை, ரூரல் போலீசார் திட்டமிட்டே கொன்றுவிட்டதாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் மனித உரிமை ஆணையம் போன்ற அமைப்பை நாடிவிடாமல் இருப்பதற்காக, அவர்களை போலீசார் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

 

உறவினர் சரவணன் கூறுகையில், ‘‘கதிர்வேலை வேண்டுமென்றே போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். யாரையோ காப்பாற்ற, கதிர்வேலை காவு வாங்கிவிட்டனர். யாரிடமோ போலீசார் பணம் வாங்கிக்கொண்டு இப்படி செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்றார்.

 

சரண்டைய வந்த கதிர்வேலை, தீவிரமாக விசாரிக்காமல் என்கவுன்டர் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? யாரை காப்பாற்ற போலீசார் நாடகமாடுகின்றனர் ?இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும் என்று, கதிர்வேலின் உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Leave a Reply