மேற்கு வங்கத்தை குறிவைக்கும் ஃபனி புயல்! பிரசாரங்களை ரத்து செய்தார் முதல்வர் மம்தா!!

ஒடிசாவில் கரையை கடந்துவிட்ட ஃபனி புயல், அங்கு கோர தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.

 

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், அதிதீவிர புயலாக உருவெடுத்து இன்று காலை 8:00 மணி முதல், 11:00 மணி இடையே, ஒடிசாவில் கரை கடந்தது. கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையை கடந்த புயலால் ஒடிசாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் சரியான விவரங்கள், மதிப்பீடுகளுக்கு பிறகே தெரிய வரும்.

 

ஒடிசாவில் உள்ள 14 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. பல இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. கால்நடைகளும் அதிகளவில் உயிரிழந்துள்ளன.

 

இந்நிலையில், ஃபனி புயல் தற்போது மேற்கு வங்க மாநிலம் நோக்கி நகர்ந்து செல்கிறது. அனேகமாக, இன்றிரவு 9:00 மணியளவில் மேற்கு வங்கத்தை அது தாக்கக்கூடும் என்று தெரிகிறது.

 

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பிரசார பயணங்களை ரத்து செய்து, மீட்பு பணி குறித்த பணிகளில் இறங்கியுள்ளார். மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.


Leave a Reply