ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை, ராமநாதபுரம் சிக்னல் அருகே முத்துாட் மினி என்ற நிதி மற்றும் நகை அடகு நிறுவனம் உள்ளது. கடந்த 27ஆம் தேதி மதியம், பணியில் இருந்த ஊழியர்கள் ரேணுகாதேவி, திவ்யா ஆகியோரை தாக்கி, முகமூடி அணிந்த நபர் 812 சவரன் நகை, ரூ. 1.34 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நகரின் மத்தியில், மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பெரிய அளவில் நடந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்த இரு பெண் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், அருகில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, ஊழியர் ரேணுகாதேவி அளித்த தகவலில், கொள்ளையன் இந்தியில் பேசியதாக கூறப்பட்டது. கொள்ளையன் சென்ற ஆட்டோவை ஓட்டிய முதியவரோ, அவர் தமிழில் பேசியதாக கூறினார். நிதி நிறுவனத்தின் மற்றொரு ஊழியர் திவ்யா, ‘தனக்கு, காபி குடித்த பின 3.15 மணி அளவில் திடீரென துாக்கம் வந்து விட்டது ‘ என்றார். கொள்ளையன், தனது முகத்தில் குத்தியதால் மயங்கி விழுந்ததாக, ரேணுகாதேவி தெரிவித்தார்.
இதில் ரேணுகாதேவியின் தகவலில் பல முரண்பாடுகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் துருவித்துருவி விசாரித்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில், ஒருவருடன் மட்டும் பேசி வந்துள்ளார். அந்த நபர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுரேஷ், 32 என்று தெரிந்தது.
அவருக்கும், ரேணுகாதேவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இருவரும் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், கொள்ளையன் தாக்கியதில் முகத்தில் காயம் என்று கூறி, அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு ரேணுகாதேவி சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், காயம் எதுவும் இல்லை என்று அனுப்பிவிட்டனர். பிறகு பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார்.
கொள்ளை நடக்கும் முன், ஊழியர் திவ்யாவுக்கு, காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரேணுகாதேவி துாங்க வைத்துள்ளார். அதன்பிறகே, சுரேஷூக்கு போன் செய்து வரவழைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
சுரேஷின் தந்தை அனுமன், சத்தியமங்கலத்தில் நகை பட்டறை வைத்துள்ளார். கொள்ளையடித்த நகைகளை அவரிடம் கொடுத்து கட்டியாக மாற்றி வைத்திருந்தனர். இதையும், 1.34 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படையினருக்கு, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் பாராட்டு தெரிவித்தார்.
ரேணுகாதேவி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது கணவர் மிக ஏழ்மையான நிலையில் உள்ளார். இதற்கிடையே சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷூடன் பழக்கம் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளாக நெருங்கி பழகினோம். போதிய வருமானம் இல்லாததால், ஒரே நாளில் பணக்காரர் ஆகி உல்லாச வாழ்க்கை வாழ நினைத்தோம். எங்கள் நிறுவனத்தில் பணம், நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு, சிக்கிக் கொண்டோம் என்றார்.