ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி! தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் இ.பி.எஸ். ஆவேசம்

மேட்டுப்பாளையம்: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்று, மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.

 

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையப் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

 

 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு, திமுகவினர் ஏராளமான தொந்தரவுகளை அளித்து வந்தனர். திமுகவின் அராஜகத்தை தாண்டித்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கட்சி மற்றும் ஆட்சியை நடத்தி வந்தார்.

 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவை உடைக்க  ஸ்டாலின் பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்கள் இடையே வாக்கெடுப்பு நடைபெற்றபோது திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.  இருப்பினும் அதிமுக வெற்றி பெற்றது.

 

அதிமுகவை கலைக்க, சிலரை தூண்டிவிட்டு ஆட்சியை பல்வேறு பொய் வழக்குகளை திமுக போட்டது. அனைத்தையும் முறியடித்து வழக்குகளையும் தவிடுபொடியாக்கி அதிமுக ஆட்சியை தக்க வைத்தது.

அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது என்று ஸ்டாலின் கேள்வி கேட்கிறார். திமுகவின் திட்டங்களை அவர் கூறுவது கிடையாது.  ஏனென்றால் திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களும் நிறைவேற்றவில்லை.

 

மேட்டுப்பாளையத்தில் ரூ.92 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.  அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைக்க இரண்டாம் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரி ரூ.8 மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது.

 

திமுக வேட்பாளர் ஆ ராசா திமுக,காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தபோது 2 ஜி ஊழல் செய்து சிறைக்குச் சென்றார். இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். இவ்வாறு அவர் பேசினார்.

 

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மக்களவை உறுப்பினர் ஏகே செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.

*


Leave a Reply