ஜனநாயகன் படத்துக்கு சென்சார் கிடைக்குமா..?
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கே.வி.என் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. விரைவில் சென்சார் சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு யு.ஏ. சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி பி.டி. உஷா உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உடனடியாக தணிக்கை வாரியம் சார்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது ’பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினோம். ஆனால், அவகாசம் வழங்காமல், உடனடியாக சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டார்’ என சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? படத்துக்கு சான்று பெறும் முன் வெளியீட்டு தேதி அறிவித்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சென்சார் போர்டு மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அந்த வகையில் இன்று ஜனநாயகன் பட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் தலா 30 நிமிடங்கள் வாதிட உள்ளதாக தலைமை நீதிபதியிடம் தெரிவித்தனர். அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில், ”14 காட்சிகளை நீக்க வேண்டும் என பட நிறுவனத்திற்க்கு தெரிவிக்கப்பட்டது உண்மை.
ஆனால் இதற்காக மட்டுமே உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோர முடியாது. மீண்டும் படத்தை பார்த்து முடிவெடுக்க கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது. கடந்த 6ஆம் தேதி இந்த வழக்கு தொடரும் போதே இந்த படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது பட நிறுவனத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் இதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை.” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், “எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய 8 வாரங்கள் அவகாசம் வழங்காவிட்டாலும், 4 நாட்களாவது வழங்கியிருக்கலாம். ஆனால் தனி நீதிபதி அதை செய்யவில்லை.” என சென்சார் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள சென்சார் போர்டுக்குதான் அதிகாரம் இருக்கிறது. ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறி தயாரிப்பு நிறுவனம் உடனடி நிவாரணம் கோர முடியாது” என தெரிவிக்கப்பட்டது.






