--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்ககளில் மிக கனமழை..!

2

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அப்பால் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

இதன் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

 

அதேபோல், நாளை(அக்டோபர் 22) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

 

அதேநேரம், அக்டோபர் 23ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநாளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வரும் அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோவை, தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக வனிலை மையம் கூறியுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Right Menu Icon