பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள் மத்தியில் உள்ளது. எனினும், மகளிருக்கு திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மாநாட்டை பிரசாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டார். திமுகவின் கொங்கு மண்டல மாநாடு, தேர்தலில் கைகொடுக்குமா என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்புத்தூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது, டிசம்பர் 29ஆம் தேதி திங்களன்று மதியத்தில் இருந்தே, ‘கருப்பு – சிவப்பு’க் கடலாக மாறியிருந்தது. “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” எனும் தலைப்பில் தி.மு.க.வின் மேற்கு மண்டல மகளிரணி மாநாடு பிரம்மாண்டமாய் நடந்தேறியது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை எனச் சொல்லப்படும் நிலையில், அதைத் தகர்க்க தி.மு.க. போட்ட அஸ்திரம்தான் இந்த மகளிர் மாநாடு.
தொண்டர்கள் மத்தியில் மாநாடு பிரம்மாண்டமாகத் தெரிந்தாலும், ‘எதிர்பார்த்த கூட்டம் இல்லையே’, ‘புது அறிவிப்புகள் ஏதுமில்லையே’ என்ற முணுமுணுப்புகள் காற்றில் மிதக்காமல் இல்லை. ஆனால், தி.மு.க. தரப்பின் உற்சாகம் ஒரு படி மேலேதான் இருந்தது. குறிப்பாக, இந்த மாநாட்டின் மொத்த ஏற்பாடுகளையும் கவனித்த கரூர் டீம், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் என சொல்லி அசத்தினார்கள். இதற்காகவே, 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல், 4000 பேருந்துகள் நிறுத்தும் வசதி என ஏற்பாடுகள் உச்சத்தில் இருந்தன.
மகளிர் அணியினர் கருப்பு, சிகப்பு நிறங்களில் சேலை மற்றும் சுடிதார் அணிந்து வந்ததைக் காண, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதை கவனித்த உள்ளூர் அ.தி.மு.க.காரர்கள், “பல்லடம், திருப்பூரில் உள்ள சில கம்பெனிகளில் இருந்து வட மாநிலத் தொழிலாளிகள், கல்லூரி மாணவிகள் எல்லாம் அழைத்து வரப்பட்டிருக்காங்க. அதுமட்டுமில்லாம, கட்சித் தலைமையே கலந்துகொள்ளும் மாநாட்டிற்கு, சேலை, சுடிதார் கொடுத்து ‘டிரெஸ் கோட்’ வேற வெச்சு இருக்காங்க!” என சமூக வலைதளங்களில் கமெண்டுகளை தெறிக்க விட்டனர்.
மாநாட்டுக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளில் தி.மு.க. எப்போதுமே டாப்தான். அந்த அக்கறை பல்லடத்திலும் தெரிந்தது. 350 மொபைல் கழிவறைகள், தாய்மார்களுக்கான தனி அறைகள், மினி கிளினிக் என அசத்தி இருந்தனர்.
மாநாட்டுக்கு வந்த பெண்களுக்கு, பிஸ்கட், மிக்சர், இனிப்பு, குளிர்பானம், தண்ணீர் பாட்டில் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு மதிய உணவும், மாநாடு முடிந்து திரும்பும்போது இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களுக்கு பணமும் வழங்கப்பட்டதாக சில கிசுகிசுக்கள் எழாமல் இல்லை.
திறந்தவெளி வாகனத்தில் மாநாட்டு திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, இரு சக்கர வாகனத்தில் மகளிர் படையினர் ஊர்வலமாகச் சென்று வரவேற்பளித்தனர். “கருப்பு – சிகப்பு கடல்போல லட்சக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியது வரலாறே இருக்காது!” என நெகிழ்ந்த முதல்வர், தன் பேச்சை முழுக்க முழுக்க தி.மு.க.வின் மகளிர் நலத் திட்டங்களை விளக்கும் பிரசார மேடையாகவே பயன்படுத்திக் கொண்டார். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் என அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார்.

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உங்களைப் பார்க்கும்போதே, பவர்ஃபுல்லாக இருக்கிறது. பெண்கள் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளது.தேர்தல் அறிக்கை தான் திமுகவின் கதாநாயகன். அதை தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார்.வரும் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப்போகிறோம். அது உறுதி. மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்” என்றார்.
மேலும், “திராவிட இயக்கத்தினால், பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பெண்கள் ஆண்டிராய்டு மொபைல் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால், தமிழகத்தில் ஐபோன்களை பெண்கள் உற்பத்தி செய்கின்றனர். பெண்களுக்கு சொத்துரிமை அளித்தது திமுக. பெண்கள் சமையல் அறையை தாண்டி செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்தனர். ஆனால், இதனை உடைத்தது திராவிட இயக்கம்” என்று பெருமிதத்துடன் ஸ்டாலின் பேசினார்.
அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க.வின் 100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றம் ஆகியவற்றை தனது உரையில் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். “ஆண்கள் வாசல் வரைதான் பிரசாரம் செய்ய முடியும். பெண்கள், வீட்டுக்குள், ஏன் சமையல் அறை வரை செல்ல முடியும்!” என முடித்த முதல்வர், வீட்டிற்குள் சென்று கட்சித் திட்டங்களைச் சேர்க்கும் பொறுப்பை மகளிரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

கனிமொழி பேசும்போது, “இந்தியாவிலேயே அதிகமாக, 47% வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. கோவை, கரூர், நீலகிரி உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் தொடங்கிய 2,682 ஸ்டார் அப்களில் 56% பெண்கள் தொடங்கி இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் வன்முறைகள் நடந்தது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். நம்முடைய போராட்டத்திற்கு பிறகு தான் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. நம்முடைய ஆட்சியில் தான் அந்த பெண்களுக்கு நியாயம் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் நம்மை பார்த்து பாஜகவினர் பேசுகிறார்கள்” ஒரு பிடிபிடித்தார் கனிமொழி.
துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, “நம் கூட்டத்தைப் பார்த்து, சங்கிகள் கூட்டமும் அடிமைக் கூட்டமும் புலம்புகின்றன; பதறுகின்றன. இங்கு பல்லடத்தில் கூடியுள்ள மாநாட்டுக் கூட்டத்தைப் பார்த்தால், சங்கிகள் கூட்டமும் அடிமைக் கூட்டமும் 10 நாட்களுக்கு தூங்க மாட்டார்கள். நாட்டின் மகளிரின் உரிமைக் குரலாக முதலமைச்சர் விளங்குகிறார். 1989-ல் மகளிருக்கு பாதிச் சொத்து கொடுக்க வேண்டும் என்று ஆணை இட்டவர் கருணாநிதி. பெண்களுக்கு ஆட்சியில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததும் அவர்தான்” என்றார்.

மாநாட்டில் கனிமொழிக்குக் கிடைத்த முக்கியத்துவம், குடும்பத்துக்குள் இருந்த மனத்தாங்கல்களை ஸ்டாலின் சாமர்த்தியமாகத் தீர்த்திருக்கிறார் என்பதைக் காட்டியது. உதயநிதிக்குக் கிடைத்த முக்கியத்துவத்தால் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட குமுறல்கள் தீர்ந்துவிடும் விதமாக, நாடாளுமன்ற குழுத் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளுக்குப் பிறகு, இப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுத் தலைவர் மற்றும் மேற்கு மண்டல மாநாட்டுப் பொறுப்பு என அடுத்தடுத்து ‘பொறுப்புகளை’க் கொடுத்து ‘குஷி’ப்படுத்தியுள்ளார் முதல்வர்.
கொங்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்தது வெறும் 14 இடங்கள் மட்டுமே. அ.தி.மு.க. 22 இடங்களைப் பிடித்து கொங்கு கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த நிலைமையை மாற்றி, கொங்குவை தன் வசமாக்க, தி.மு.க. மகளிர் அணியை களமிறக்கியதில் அரசியல் வியூகம் உள்ளது.
ஆனால், திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் இருந்தது போன்ற எழுச்சியோ, இளம் தலைமுறை புதிய வாக்காளர்களைக் கவரும் கவர்ச்சிகரமான அம்சங்களோ பல்லடம் மாநாட்டில் மிஸ்ஸிங்! புது அறிவிப்புகள் ஏதுமின்றி, ஏற்கெனவே செய்த சாதனைகளைப் பட்டியலிட்டது, தேர்தல் பிரசாரக் கூட்டம்போலவே இருந்தது. பிரம்மாண்ட மேடை, ஆயிரக்கணக்கான விளம்பரப் பலகைகள் என வெளித்தோற்றத்திற்குப் பிரமாண்டமாகத் தெரிந்தாலும், ‘அ.தி.மு.க. கோட்டையில் ஓட்டை போட’ எந்தவொரு உறுப்படியான வியூகமும் வகுக்கப்படவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பொதுவான கருத்து.
மகளிர் எழுச்சி, கட்சி வளர்ச்சி, அரசியல் தாக்கம் என எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், கடைசியில், கொங்கு மண்டலத்துத் தாய்மார்கள், ‘சுவையான விருந்து, கையில் கொஞ்சம் மிக்சர், வீடு திரும்பும்போது வாழைத்தார்…’ என திருப்தியோடு சென்றார்கள். இதில், அரசியல் பேசிய ஸ்டாலினின் குரல் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்திருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.







