கடுப்பேற்றும் பாஜக!  அணி மாறுகிறதா தேமுதிக?  படபடப்பில் அதிமுக!!

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பாரதிய ஜனதா கட்சி கடுப்பேற்றி வரும் நிலையில்,  தேமுதிகவும் அதிக சீட்டுக்காக அணி மாறப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. இதெல்லாம், அதிமுகவிற்கு கலக்கத்தை தர, கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் பணிகளில் இறங்கி இருக்கிறது.

 

தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இச்சூழலில், அதிமுக, திமுக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை, தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

 

அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை பெருமாள் கோயிலில், டிசம்பர் 19ம் தேதி பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அதிமுக சார்பில் அதிகாரபூர்வ தேர்தல் பிரசார கூட்டம் டிசம்பர் 27ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

 

குடைச்சல் தரும் பாஜக 

 

தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக அணியில் குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற அறிவிப்பை, அதன் கூட்டணி கட்சியான பாஜக இன்னும் முழு மனதுடன் ஏற்கவில்லை.  முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகதான் அதை சொல்ல வேண்டும் என்பது, தாமரைக்கட்சிக்காரர்களின் வாதமாகும்.

 

ஆனால், பாஜகவின் இந்த திடீர் மோதல் போக்கிற்கு வேறு காரணம் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என்ற நினைப்பில் அதிமுகவிடன் கைகோர்த்தது பாரதிய ஜனதா. ஆனால், ரஜினியோ அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டார்;  எனவே, ரஜினிகாந்தின் பக்கம் திரும்பலாமா என்று பாஜக யோசித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.

 

ரஜினியிடம் கைகோர்க்கும் முன்பு, அதிமுகவை கரைக்க வேண்டும்; அக்கட்சியை பலமற்றதாக்க வேண்டுமென்று பாஜக திட்டமிட்டு, அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருவதாகவும், அதன் ஒருபகுதியே முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தேவையில்லாமல் முரண்டு பிடித்து வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

 

இரட்டை இலை முடக்கமா?

 

இதை உறுதி செய்வது போல், தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு, ஒரு சதி நடப்பதாக, அவர் வெளிப்படையாக தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தற்போதைய சூழலைப் பயன்படுத்தி தேசிய கட்சிகள் உள்நுழையப் பார்ப்பதாக, பாஜகவின் பெயரை குறிப்பிடாமல், காட்டமாக விமர்சித்தார்.

 

அத்துடன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதே இல்லை, அதிமுக தலைமையில்தான் ஆட்சி; எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று, பாஜகவிற்கு நறுக்கென்று ஒரு குட்டு வைத்தார்.  முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே மோதல் முற்றி வரும் சூழலில், அதை தணிக்கும் முயற்சியாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன், முதல்வர் எடப்பாடியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

அதேநேரம், பாஜகவின் இந்த போக்கால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் அதிமுக, இனி அந்த கட்சியை நம்பியிருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளதான், எனவே, கூட்டணியின் மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக ஆகியவற்றை அரவணைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாம்.

 

அதன் ஒருபகுதியாக, டிசம்பர் 22ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸை, அவரது தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்று அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன் ஆகியோர் சந்தித்தனர். சட்டசபை தேர்தலில் பாமகவுக்கு ஒதுக்கப்படும் சீட் எண்ணிக்கை குறித்து, இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாம். ஏற்கனவே தயாநிதி விவகாரத்தில் பாமக – திமுக இடையே லடாய் உள்ளதால், திமுக பக்கம் பாமக சாயாது என்று அதிமுக நம்புகிறது.

 

தேமுதிக தரும் நெருக்கடி

 

அடுத்ததாக, தேமுதிக! 2011இல் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை வாங்கி 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற்றது. இம்முறை அதிமுக கூட்டணியில் 36 தொகுதிக்குக் குறையாமல் வேண்டுமென்று, தேமுதிக கேட்டது.

 

ஆனால் இதை ஆரம்பத்திலேயே அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, வரும் தேர்தலில் தனியாக நிற்கச் சொல்லி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தி வருவதாக, அதன் பொருளாளர் பிரேமலதா பேசி வருகிறார். எங்கு சீட் அதிகம் கிடைக்குமோ அங்கு செல்லவும் தேமுதிக தயார் என்றும் கூறியிருக்கிறார்.

 

எனவே, அந்த கட்சியை சமாதானப்படுத்த, அதிமுக முயன்று வருகிறது.  தேமுதிகவோ, 32 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்டு,  அத்தோடு தேர்தல் செலவுகளையும் அதிமுக கவனித்துக் கொள்ள  வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது. இதுதொடர்பாக, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை அதிமுக அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

எப்படியும், விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசி,  வேண்டிய வாக்குறுதிகளைக் கொடுத்துட்டு, கூட்டணியை உறுதிசெய்துவிட்டு வருமாறு அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அதிமுக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

 

புத்தாண்டில் புது திருப்பம்?

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபடவிருந்த சூழலில், மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகதான், அதை காப்பாற்றியது. அதன் பிறகு பல்வேறு வகையிலும் பாஜகவுக்கு அனுசரித்து, அதிமுக சென்றுள்ளது. அதை இங்குள்ள கட்சிகளே கடுமையாக விமர்சித்து வருகின்றன.

 

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டாலும், தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது, அதிமுகவிற்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.  எனவே, பொருத்தது போதும், பொங்கிவிட வேண்டியதுதான் என்ற மன நிலைக்கு அதிமுகவும் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். எனவே, புத்தாண்டு பிறந்ததும் தமிழக அரசியல் களம், புதிய திருப்பங்களை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.