வள்ளுவர்நகரில் வசூல் ’வேட்டை’! திருப்பூா் வடக்கு தாசில்தார் ஆசியுடன் தண்டல்காரர் சேட்டை! முறைகேடு தடுக்க கலெக்டர் சுழற்றுவாரா சாட்டை?

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதிகளில், புறம்போக்கு பட்டா தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் தலைக்கு ரூ.500 என வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

தமிழ்கத்தில், புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அரசின் பொறுப்பில் இருக்கும் நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து, அபராதமாக தண்டத்தீர்வை வசூலிக்கும் அறிவிப்பை பி–மெமோ ( பேச்சு வழக்கில் பீமா பட்டா) என்று சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்ய, அவ்வப்போது நத்தம் புறம்போக்கு நிலங்கள் குறித்த சர்வே நடக்கும்.

 

அதாவது, அந்தந்த நிலப்பகுதியில் அந்தந்த பெயரில் உள்ளவர்தான் வசிக்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள, அவர்களின் புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றுடன் மனு ஒன்றை பெறப்படும்; பின்னர் அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்தில், இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யபப்டுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த பணி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைபட்டிருந்தது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் நத்தம் புறப்போக்கு நிலங்களில் வசிப்போரின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், நத்தம் புறம்போக்கு சர்வே நடக்கிறது என்ற தகவலை மறைத்து, புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா தருவதாக திரித்துக்கூறி, சில இடங்களில் அப்பாவி பொதுமக்களிடம் பணவேட்டையில் அதிகாரிகள் இறங்கியுள்ளதாக, நமது ’குற்றம் குற்றமே’ வாரஇதழுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, புகாரின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள, நமது சிறப்பு நிருபரை களமிறக்கினோம்.

 

இதற்காக நாம் நேரடியாக விசாரித்த பகுதி, திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் ஆகும். அங்குள்ள ரங்கநாதபுரம் அருகே வள்ளூவர்நகரில் ‘குற்றம் குற்றமே’ இதழ் நேரடி விசாரணை நடத்தியது. அங்கு, பட்டா இல்லாமல் புறம்போக்க்கு நிலத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

 

வசூல் வேட்டை

 

அந்த பகுதிக்கான தண்டர்காரர் ஜெயபால் என்பவர், பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு, நத்தம் புறம்போக்கு சர்வே நடப்பதை, பட்டா தருவதற்கான கணக்கெடுப்பு நடக்கக் கூறியிருக்கிறார். அத்துடன், அப்பகுதியில் யார்யாருக்கு பட்டா தேவையென்ற விவரங்களை சேகரித்து தரும்படி அங்குள்ளவர்களிடம் தெரிவிக்கிறார். இதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அத்துடன் விண்ணப்பத்திற்கு ரூ. 500 தேவையென்று சொல்லி, அங்கு வசூல் வேட்டை நடந்துள்ளது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், ஒரு குடும்பத்தில் 3 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால், 3 பேரும் தனித்தனியாக பட்டா பெற முடியும் என்று சொல்லி, குடும்பத்தில் தலைக்கு தனித்தனியாக ரூ.500 பெற்றுள்ளனர்.

 

இந்த விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து, வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி, இப்படியா பொதுமக்களிடம் பணத்தை பிடுங்குவது என்று, சாபம் விடாத குறையாக பலர் நம்மிடம் ஆதங்கப்பட்டனர்.

 

பல பகுதிகளில் சிறுக சிறுக நடக்கும் வசூல், இறுதியில் பெரிய தொகையாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை; இவ்வாறு கிடைக்கும் தொலையை கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், தாசில்தார்கள் ஆகியோர் பங்கு போட்டுக் கொள்கிறார்களோ என்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

இதுபற்றி திருப்பூர் வடக்கு தாசில்தாரை தொடர்பு கொண்டு, ‘குற்றம் குற்றமே’ இதழ் தரப்பில் கேட்டோம். அவரோ, ”நத்தம் புறம்போக்கு சர்வே மட்டுமே நடக்கிறது. பட்டா தருவதற்கு கணக்கெடுப்பு எதுவும் நடக்கவில்லை. இதுபற்றி விசாரிக்கிறோம்” என்று கூறு நழுவினார். இதற்கிடையே, சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி, அவிநாசிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

இன்னொருபுறம், வள்ளுவர் நகரில் நத்தம் புறம்போக்கு கணக்கெடுப்பில் வேண்டுமென்றே சிலரை தவிர்க்க முயற்சிகள் நடந்தன. அதாவது, அவர்கள்தான் ஊடகங்களுக்கு தகவல் தந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை ஓரங்கட்ட அதிகாரிகள் தரப்பில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவ்வாறு யாரும் நமக்கு தகவல் தெரிவிக்காத நிலையில், இதுபற்றி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விடுபட்டவர்களின் பெயரை மீண்டும் சேர்க்க, குற்றம் குற்றமே இதழ் நடவடிக்கை எடுத்தது.

 

முறைகேடு தடுக்க
கலெக்டர் சுழற்றுவாரா சாட்டை?

 

அரசு ஒரு நோக்கத்துடன் கணக்கெடுப்பு நடத்தினால், இடையில் அதிகாரிகள் அதை வேறு திசையில் திருப்பி, வசூல் வேட்டையில் இறங்குவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயரையே ஏற்படுத்தித் தரும். எனவே, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் நத்தம் சர்வே பற்றி முழுவிசாரணைக்கு திருப்பூர் கலெக்டர் உத்தரவிட வேண்டும்; அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


கோவையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினை இன்று கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான ராசாமணி பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவன்று வாக்காளர்கள் எளிதில் சென்று வாக்களிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதற்கான பணிகளை வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சிறப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்பேரில் கோவை மாவட்டத்தில் 12,686 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர் வாக்குச்சாவடி மையங்களில் சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்தளப்பாதை, குடிநீர்,மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மாவட்டத்தில் உள்ள 975 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 3070 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 975 வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை இன்று கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான ராசாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக உதவி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வாய் பேசாத,காது கேளாத மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும் சைகை மொழியில் விளக்கமளிக்கவும் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.