பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2,000 ரொக்க பணம்..!

வ்வொரு ஆண்டும் தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நாள் உழவர்களின் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் தமிழர்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2000 ரொக்கப்பணம் வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஃபெஞ்சல் புயல், அதிகனமழை உள்ளிட்டவற்றால், அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகள் எல்லாம் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

 

இதன்மூலம் ஏற்பட்ட இழப்பினைச் சரி செய்வதற்கே அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதனால் தமிழக மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.இந்த நிலையில், தி.மு.க. அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பின்மூலம், பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

தமிழக மக்கள் 2025 பொங்கல் திருநாளை சிறப்புறக் கொண்டாடும் வகையில், எவ்வித பாகுபாடின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் பரிசு தொகுப்பில் திடீர் மாற்றமா..?

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத்தொகுப்பு கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசே நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொங்கல் பரிசு தொகப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாகவும் அதன் காரணமாக கரும்பு விவசாயிகள் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

பொங்கல் பண்டிகையும் கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி அரசுக்கு மனு அளிப்பதாகவும் அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வெல்லம் சேர்க்க வேண்டும் – பாலகிருஷ்ணன் கடிதம்

பொங்கல் பரிசு தொகப்பில் கரும்பு. வெள்ளம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்குமாறு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

 

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பு அறிவித்திருப்பதை வரவேற்பதாக அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 

இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கூடுதல் கரும்பை விளைவித்திருப்பதாக தெரிவித்தனர். பொங்கல் பரிசு தொகையில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் பெறும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேபோல் பொங்கல் பரிசில் வெல்லம் இடம் பெறாதது உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 


பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பல்லி..!

திருத்தணியில் கூட்டுறவு மண்டக சாலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசுப் பொருட்களில் பல்லி இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தன் என்பவர் தனது குடும்பத்திற்கு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுள்ளார்.

 

இதில் புளி பார்சலில் இரண்டு பல்லிகள் இருந்துள்ளது. இதுகுறித்து ரேஷன் கடையில் கேட்ட பொழுது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பயனாளி நந்தன் வேதனை தெரிவித்துள்ளார்.