கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக வணிகர் சங்க உறுப்பினர்களுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழில் பெயர் பலகைகள் வைப்பது தொடர்பான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பை பெறுதல் போன்றவை தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின் படி ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உணவகங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படாவிட்டால் தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியின் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






