முதல்வர் வேட்பாளர்களுடன் விவாதம்: செய்திச்சானல்களுக்கு சீமான் ஐடியா!

தமிழகத்தில் உள்ள செய்திச் சேனல்கள், முதல்வர் வேட்பாளர்களை ஒன்றாக அழைத்து விவாதம் நடத்த வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

வரும் 8ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. இதில் 50 சதவீதம் பேர் பெண்க. தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம் சென்று பிரசாரம் செய்து வருகிறார். சீர்காழியில் நாம் தமிழர் வேட்பாளர் கவிதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து சீமான் பேசியதாவது:

 

இங்கு இருப்பவர்கள், எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டி பேசுகிறார்கள். அப்படிப்பட்ட அமெரிக்காவிலேயே வாக்குச்சீட்டு முறைதான் உள்ளது. ஆனால் அங்கு மனிதக்கழிவுகளை இயந்திரங்கள் அள்ளுகிறது. ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா ஸ்மார்ட் சிட்டி என்று சொல்கிறார்கள், ஆனால், மனிதக்கழிவை மனிதர்தான் அள்ள வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தை ஒரு நாடக கம்பெனியாக மாற்றிவிட்டனர்.

 

இங்குள்ள தொலைக்காட்சிகளுக்கு எல்லாம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். தேர்தலில் போட்டியிடும் அனைத்து முதல்வர் வேட்பாளர்களையும் ஒன்றாக நிறுத்துங்கள். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமலஹாசன், சீமான் என அனைவரையும் 20 நிமிடங்கள் பேச வைத்து விவாதிக்கலாம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேளுங்கள். யார் சொல்வது சரியாக இருக்கிறதோ அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடட்டும்.

 

ஆண்களும், பெண்களும் சமம் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை, அதனால் தான் 117 தொகுதிகளில் பெண்களைப் போட்டியிட வைக்கிறோம். ஆனால் திமுக 12 இடங்களையும், அதிமுக 14 இடங்களையும்தான் பெண்களுக்கு வழங்கி இருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், மீனவர்களைப் பாதுகாப்பதற்காக நெய்தல் படை என்ற படை உருவாக்கப்படும். மீனவர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் தனி தொகுதி உருவாக்கப்படும் என்று சீமான் பேசினார்.


திருவொற்றியூரில் சீமான் போட்டி! நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகம்!!

சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்; திருவொற்றியூர் சீமான் போட்டியிடுகிறார்.

 

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஒருமாதம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றிரண்டை தவிர மற்றவற்றுடன் தொகுதி உடன்பாடுகளை செய்து கொண்டுள்ளன. மறுபுறம், யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன.

 

இந்த நிலையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, நேற்று தனது வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்றிரவு நடந்த பிரசார கூட்டத்தில், 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் ஆவர்.

 

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். அறிமுக கூட்டத்தில் பேசிய சீமான், அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர் என்று குற்றம்சாட்டினார். பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை என்றார்.

 

மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. ஆணுக்கு பெண் சமமல்ல. ஆணும், பெண்ணும் சமம். விவசாயி வாழ்ந்தால் நாடு வாழும். விவசாயிகள் செத்தால் அது நாடல்ல சுடுகாடு என்று சீமான் ஆவேசமாக குறிப்பிட்டார்.