அமைச்சர் பெயரில் வேட்டை! திருப்பூர் ஏ.பி.ஆர்.ஓ. சேட்டை!!குமுறும் அதிகாரிகள், திமுக தொண்டர்கள்..சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவாரா சதீஷ்குமார்?

திருப்பூர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரின் அடாவடிகளும், அமைச்சர் பெயரில் நடத்தும் வசூல் வேட்டைகளும் ஆளும் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.  இவ்விஷயத்தில் அமைச்சர் சாமிநாதன் தலையிட்டு, அவரை சட்டத்தின் முன்பு நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று அதிகாரிகள், திமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

கெஞ்சிக்கூத்தாடி பதவி பெற்றவர்

 

ரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நிறைவேற்ற, மாவட்டம் தோறும் மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ.) நியமிக்கப்படுகிறார்; அவருக்கு கீழ், ஏ.பி.ஆர்.ஓ. உள்ளார். ஆனால், திருப்பூர் மாவடத்தில் ஏ.பி.ஆர்.ஓ. ஆக உள்ள சதீஷ்குமாரின் செயல்பாடுகள், திமுக அரசுக்கு அவப்பெயரையும், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

இவரது தந்தை தாராபுரத்தில் அதிமுக கிளைச் செயலாளராக இருந்தவர். அரசியலில் தந்தை இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, அப்போதைய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி, எந்தவொரு அரசு போட்டித் தேர்வும் எழுதாமல் கொல்லைப்புறமாக ஏபிஆர்ஓ-வாக பதவி பெற்றார் சதீஷ்குமார்.

 

காக்காய் பிடிப்பவதில் வல்லவரான சதீஷ்குமார், அதிமுக ஆட்சி காலத்தில் போட்ட ஜால்ரக்களை பார்த்து அதிகாரிகளே வாயடைத்து நின்றனர். காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை வைத்துக் கொண்டு, பூக்களை தூவிக் கொண்டு, அம்மா ஜெயலலிதா தான் தனக்கு கடவுள் என்று சொல்லி, அதிமுகவினரையே புல்லரிக்கச் செய்வார்.

தொடரும் அத்துமீறல்கள்

 

திமுக ஆட்சியிலும் இவரது கொட்டம் அடங்கவில்லை. செய்தித்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்தில், அவரது பெயரை பயன்படுத்தி ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமார் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதுடன், அதிகாரிகள் மத்தியில் மமதையுடன் நடந்து கொண்டு, அவர்களை அவமதித்து வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

பொதுவாகவே, ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமார் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தவர்.  இவர், முன்பு திருப்பூர் ஏ.பி.ஆர்.ஓ.ஆக இருந்த போது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு எழுந்தது.  கொரோனா ஊரடங்கு காலத்தில் சரியாக பணிக்கு வராதது, தனது பணியில் அக்கறையின்றி செயல்பட்டது;  அதிகாரிகளிடம் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டது; அலுவலக டிரைவரை, தனது சொந்த பணிக்கு பயன்படுத்தியது உட்பட குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

இது தொடர்பாக, அப்போதைய பி.ஆர்.ஓ ஜான் ஜெகத் பிரைட், மக்கள் செய்தி தொடர்புத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பியிருந்தார்.  இதையடுத்து, 15 நாளில் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென, இயக்குனர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பின்னர் சதீஷ்குமார், திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். அதன் தொடர்ச்சியாக ஈரோடுக்கு சதீஷ்குமார் மாற்றப்பட்டார்; அங்கும் நிருபர்களை மரியாதைக்குறைவாக நடத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கினார்.

 

திமுக ஆட்சியிலும் தொடரும் ஆட்டம்!

 

இதனிடையே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்றது. அப்போது, யாரும் எதிர்பார்த்திராத வகையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனே செய்தித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

 

திருப்பூர் மாவட்ட அமைச்சர் செய்தித்துறைக்கு கிடைத்திருக்கிறார் என்பதால், மாவட்டத்தில் செய்தித்துறையில் நிலவும் சீர்கேடுகள், முறைகேடுகள் களையப்படும் என்ற நம்பிக்கை, அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டது;  செய்தியாளர்களும் அப்படித்தான் நம்பினர். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை; பழைய நிலையே நீடித்தது.

 

அமைச்சர் சாமிநாதனின்  உதவியாளர் செல்லமுத்துவை பிடித்து, ஐஸ் வைத்து, ஈரோட்டில் இருந்து மீண்டும் திருப்பூருக்கு பணி மாறுதல் பெற்று சதீஷ்குமார் திரும்பினார். அதன் பின்னர், ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரின் ஆட்டம் பலமடங்கு வேகம் பிடித்தது. அதிகாரிகளை மதிக்காததுடன், அவர்களை பலர் முன்னிலையில் திட்டுவது, அவமதிப்பது என, அத்துமீறல்கள் எல்லை மீறிச் சென்றன.

 

அதிகார மமதையில் வசூல் வேட்டை!

மாதாமாதம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஜே.டி.  ரேங்கிற்கு நிகராக உள்ள அதிகாரிகளிடம் வசூல் நடக்கிறது. அதாவது, அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் செய்யப்படும் நிகழ்ச்சிகளின் போது, டீக்காசு என்ற பெயரில் வசூல் வேட்டையில் இறங்கிவிடுகிறார் ஏபிஆர் ஓ சதீஷ்குமார். அப்பட்டமாக அதிகாரிகளை மிரட்டியே இந்த வசூல் நடக்கிறது என்று பெயர் வெளியிடவிரும்பாத அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

 

கனிவு, பரிவு என்றால் என்னவென்றே தெரியாத ஏ.பி.ஆர்.ஓ. எல்லோரிடமும் பந்தாவாகவும் தான் வைத்ததும்தான் சட்டம் என்ற ரீதியில் செயல்பட்டு வந்துள்ளார். இதையெல்லாம் யாராவது தட்டிக்கேட்டால், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் என் உறவினர்; முடிந்தால் அவரிடமே போய் சொல்லிப்பாரு… என்ற ரீதியில், அவர்களையே கடுமையாக எச்சரிப்பதுமாக சதீஷ் இருந்துள்ளார்.  இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் உள்ளன.

 

சில மாதங்களுக்கு முன்பு, தமிழக அரசின் ஓராண்டு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு விழாவுக்கு அரசின் ஏ.பி.ஆர்.ஒ சதீஷ்குமார், கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தன் இஷ்டத்துக்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.  இதுபற்றி பிஆர்ஓ  கேட்டதால் ஆவேசமடைந்த ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ், அதிகாரிகள் முன்னிலையேயே, பி.ஆர்.ஓ.வை அவமதித்து சத்தம் போட்டுள்ளார். நாற்காலிகளை தூக்கி வீசிக் கொள்ளும் அளவுக்கு இருவரின் மோதல் எல்லை மீறியது, திமுகவினரையே பதறச் செய்தது.

 

ஏ.பி.ஆர்.ஓ.வின் செயல்பாடுகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுமே என்று தொண்டர்கள் குமுறத் தொடங்கினர். போகுமிடம் எல்லாம் வசூல் வேட்டை; மிரட்டி பணம் வாங்குவது என்பதோடு மட்டுமின்றி அரசு நிகழ்ச்சிக்கு போட்டோக்கள் எடுப்பதிலும் துட்டு பார்த்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. போட்டோக்கள் எடுக்க ரூ.4 ஆயிரம் என்று இருந்தால், 40 ஆயிரம் ரூபாய் என்று கணக்கு காட்டி கொழுத்த லாபம் பார்க்கிறாராம். இதேபோல், பிளக்ஸ் போர்டு வைத்தல், அரசு விழாவை விடியோ மட்டுமே எடுத்துத் தருவதற்கு பல மடங்கு கட்டணக் கொள்ளை என,  பல வகையிலும் காசு பார்த்து வருகிறாராம்.

அமைச்சர் மவுனம் காக்கிறாரா?

 

இது தவிர வெளியே நடக்கும் அரசு விழாக்கள், அமைச்சர்களின் நிகழ்ச்சிகளுக்கு பெட்ரோல், டீசல் எழுதி, பல லட்சங்களில் முறைகேடு நடப்பதாகவும் அதிகாரிகள் அளவில் பேசிக் கொள்கிறார்கள்.  ஆனால், இதெல்லாம் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதனின் கவனத்துக்கு போனதா, அல்லது தன் கவனத்திற்கு வந்தும் அமைச்சர் மவுனம் காக்கிறாரா ? என்ற சந்தேகங்கள் ஆளுங்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டது.

 

 

இவ்வாறு அடுத்தடுத்து தான் போகும் இடங்களில் எல்லாம் குற்றச்சாட்டுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகி, திமுகவுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி வரும் ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரை, அடுத்து நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றிவிட முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், தனது பங்காளி என்று ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமார் சொல்லி வரும் அமைச்சரின் பி.ஏ. செல்லமுத்து தான், கடைசி நேரத்தில் இதை தடுத்ததாகவும் பேசப்படுகிறது.

 

இப்படி தனக்குள்ள செல்வாக்கைக் கொண்டு அதிகார மமதையில் ஏ.பி.ஆர்.ஓ. செய்து வரும் அட்டகாசங்களால், அதிகாரிகள் செய்வதறியாமல் திகைக்கின்றனர். பூனைக்கு யார் மணியை கட்டுவது? இவர் பற்றி பலமுறை சொல்லியும் அமைச்சர் கண்டு கொள்வதில்லை; கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுமே என்று இங்குள்ள திமுக முக்கியப் பிரமுகர்களும் கவலைப்படுவதில்லை என்று பலரும் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

 

பணியிட மாற்றமா? நிரந்தர தீர்வா?

 

ஒருவேளை இந்த செய்தியின் எதிரொலியாக, நாளைக்கே கூட ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமார் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டலாம். ஆனால், அவர் அங்கும் போய் இதோபோல் ஆட்டம் போடமாட்டார் என்று என்ன நிச்சயம்? அங்கும் வசூல் வேட்டையில் இறங்கி அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தலாம்.

 

இதுவா நிரந்தரத் தீர்வு? எனவே, அமைச்சர் சாமிநாதன் இது தொடர்பாக உடனே களமிறங்க வேண்டும். ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரின் லீலைகளை தோண்டித் துருவி விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக அனுதாபியாகவும், திமுக ஆட்சி காலத்தில் திமுக விஸ்வாசியாகவும் பச்சோந்தித் தனமாக நாடமாடியவரின் உண்மை பின்னணியை தோலுரித்துக் காட்ட வேண்டும்.

 

அமைச்சரின் சாமிநாதன், அவரது உதவியாளர் செல்லமுத்து ஆகியோரின் பெயரை பயன்படுத்தி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். இன்னும் என்னென்ன மோசடிகளை செய்துள்ளார் என்பதை விசாரிப்பதுடன் ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமாரை  சட்டத்தின் முன்பு நிறுத்தி, குற்றச்சாட்டுகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதே, இந்த விஷயத்தில் அரசுக்கு ஏற்பட்ட அவ பெயருக்கு பரிகாரமாக இருக்கும்.

 

விரைவில் நடவடிக்கை!
அமைச்சர் உறுதி!

திருப்பூர் ஏ.பி.ஆர்.ஓ. சதீஷ்குமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து “குற்றம் குற்றமே” வார இதழ் தரப்பில், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை தொடர்பு கொண்டு கருத்து கேட்டோம்.

 

அவர் கூறுகையில் “இந்த புகார்கள், சர்ச்சைகள் என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை.  இந்த விஷயத்தை இனி சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். இதற்கு உரிய தீர்வு காணப்படும். ஏ.பி.ஆர்.ஓ. விஷயத்தில் என்ன நடந்தது என்பதை விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


தமிழகத்தில் திமுக ஆட்சி… புதுவையில் பாஜக அணிக்கு வெற்றி! கருத்துக்கணிப்பில் தகவல்!!

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும், புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் எனவும் டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில், வரும் ஏப்ரல் 6ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஒருமாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொண்டு பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றன.

 

தமிழகத்தில் முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெறும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் வெற்றி வாய்ப்பை பெற்றாக வேண்டுமென்று அதிமுக, திமுக இரு கட்சிகளுமே வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேபோல், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கி, சரத்குமாருடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறார்.

 

இந்த சூழலில், தேர்தலுக்கு முன்பாக மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு, வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ்-சிவோட்டர் வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் கள நிலவரத்தையும், கருத்துக்கணிப்புகளாக அது வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி அணி 65 இடங்களை பிடிக்கும் எனவும், அந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெறும், டிடிவி தினகரனின் அமமுக 3 இடங்களில் வெற்றி பெறும், மற்றவை 3 இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக, டைம்ஸ் நவ்-சிவோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் எனவும், அசாமில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி அரசு பதவியில் அமரும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.