திருப்பூரில் தீவிரமாகும் காய்ச்சல்; சுகாதார அதிகாரிகள் அலட்சியம்! டெங்கு தடுப்பு நடவடிக்கை பூஜ்ஜியம்!!
டெங்கு பாதிப்பே இல்லாதது போல் காட்டிக் கொண்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சில அதிகாரிகளால், திருப்பூரில் டெங்கு நோய் தடுப்பு பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களை பாதிக்கும் என்பதால், மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மழை என்றாலே நமக்கு உற்சாகம் பிறக்கிறது; ஆனால், மழைக்காலத்தில் வரும் நோய்களை நினைத்தால், உறக்கமே போய்விடுகிறது. மழைக்காலத்தில் நம்மை பாதிக்கும் பல நோய்களில் முக்கியமானது, டெங்கு காய்ச்சல். இது எளிதாக பரவி, குறுகிய காலத்தில் பல உயிர்களை காவு வாங்குகிறது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக டெங்குவின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இந்தாண்டு மழை சீசனும் இதற்கு தப்பவில்லை. இம்முறை வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் இருந்தே வெளுத்து வாங்கியது. தாழ்வான இடங்கள், குழுகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி, கொசுப்புழுக்கள் பெருக ஏதுவாகிவிட்டது.

இதனால், மொத்த தமிழகத்தையும் டெங்கு பீதி ஆட்டுவித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை, 3,500 ஐ தாண்டிவிட்டதாக, ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டை காட்டிலும் டெங்கு பாதிப்பு, இம்முறை அதிகமாக உள்ளது என்று, கலெக்டர் அலுவலகத்தில் அண்மையில் நடந்த வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளே ஒப்புக் கொண்டனர்.
திருப்பூர் மாநகரம், மாவட்டம் என டெங்கு நோய் தடுப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்பணிகள் சொல்லிக் கொள்ளும்படி முழுவீச்சில் நடைபெறவில்லை என்பது தான், பொதுமக்கள் பலரின் குற்றச்சாட்டாகும். நோய்த்தடுப்பு பணிகளை ஒப்புக்கு செய்துவிட்டு, மறுபக்கம் அதற்கான நிதி கபளீகரம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மாநகராட்சி முழுவதும் பலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தும், ஒரு சிலருக்கே பாதிப்பு இருப்பது போல் காட்டிக் கொண்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் தான் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் அக்கறை காட்டுவதாக அதிருப்தி நிலவுகிறது.

இந்த புகார் தொடர்பாக, 15 வேலம்பாளையம் பகுதியில் நமது, “குற்றம் குற்றமே” வார இதழ் நிருபர்கள் குழு, கள நிலவரங்களை நேரில் அலசியது. அப்போது பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
இப்பகுதியில் பலருக்கு டெங்கு அறிகுறி இருக்கிறது. ஆனால், சுகாதாரத்துறையின் நடவடிக்கையோ, பெயரளவுக்கு தான் இருக்கிறது. உண்மையில் எந்த இடத்திற்கும் சென்று டெங்கு தொடர்பாக, அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதே கிடையாது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக, தனியார் மருத்துவமனை தரும் தகவல் அடிப்படையில், பாதிக்கப்பட்ட நபரின் விவரம், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, அந்த வீடுகளில் மட்டும் தான் தூய்மைப்பணிகளை மேற்கொள்கின்றனர். கண் துடைப்புக்காக சில வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமாக இல்லை என்று சொல்லி, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது போல், அதிகாரிகள் கணக்கு காண்பிக்கின்றனர்.
சாக்கடைகள் முறையாக தூர்வாருவதில்லை; குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. மழைகாலத்தில் இப்படி சுகாதாரப்பணிகள் முடங்கிப் போய் இருப்பதே, டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணமாகிறது. சாதாரண மக்களுக்கு அபராத நடவடிக்கை என்றால், சுகாதாரப்பணிகளில் சுணக்கம் காட்டி டெங்கு பரவக் காரணமாக இருக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

மாநகராட்சி முழுவதும் ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெங்கு அறிகுறியோடு வருபவர்களை பரிசோதிக்கின்றனர். அவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதியானால், மேல் சிகிச்சைக்கு கோவைக்கு செல்லுங்கள் என்று கூறி, பக்கத்து மாவட்டங்களுக்கு சிகிச்சைக்கு அனுப்பிவிடுகின்றனர். இங்கு பாதிப்பில்லை என்பது போன்ற தோற்றத்தை, மிக சாமர்த்தியமாக ஏற்படுத்துவதாக, பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.
டெங்கு விவகாரத்தில் பெயரளவுக்கு நடக்கும் தூய்மைப்பணிகள், அதில் உள்ள குளறுபடிகள், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால், உண்மை நிலவரம் அவருக்கு தெரியாமல் போய்விடுவதாக கூறப்படுகிறது.
எனவே, திருப்பூர் ஆட்சியர் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, நேரடிகள ஆய்வு நடத்த வேண்டும். உண்மை நிலவரத்தை கண்டறிந்து, இதில் நடக்கும் முறைகேடுகள், அலட்சியப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; தவறு புரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, டெங்கு இல்லாத திருப்பூரை உருவாக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் வேண்டுகோளாகும்.

இதிலுமா காசு பார்ப்பது?
திருப்பூரின் வேறுசில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வில் சில அதிர்ச்சிகர தகவல்களை, சிலர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அதாவது, டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் அதிகாரிகள் சிலர், நன்றாக காசு பார்க்கின்றனராம்.
உதாரணத்திற்கு, நாளொன்றுக்கு, ஒரு வார்டுக்கு ஆறு துப்புரவு பணியாளர்கள் துப்புரவு மேற்கொள்வதாக கணக்கு காட்டப்படுகிறது. அவர்களுக்கு தினக்கூலியாக, ஒருவருக்கு ரூ.300 முதல் ரூ.280 என்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தரப்படுவது என்னவோ, ரூ.200 மட்டும்தானாம். இதுதவிர, இவர்களை வாரத்தில் மூன்று நாட்கள் கூட பயன்படுத்துவதில்லை; ஆனால், மாதம் முழுவதும் பணிகளை மேற்கொண்டதாக கணக்கு காட்டி, அந்த பணத்தை சுருட்டுகிறார்களாம்.
இப்படி அதிகாரிகள் சிலர், உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு காசு பார்ப்பதில் மட்டுமே குறியாக இருப்பதால், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்பது, திருப்பூரில் பேச்சளவில் மட்டுமே உள்ளதாக, நம்மிடம் பேசியவர்கள் வருத்தத்தோடு குறிப்பிட்டனர்.

தேவை, உள்ளாட்சி அமைப்பு!
டெங்கு தடுப்பு பணி போலவே, வார்டுகளில் பிற பணிகளிலும் மந்தநிலை நிலவுகிறது. முறையாக குப்பை அள்ளுவதில்லை; தண்ணீர் வினியோகத்தில் குளறுபடி போன்றவற்றை உதாரணத்திற்கு சொல்லலாம்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம், உள்ளாட்சி அமைப்பு என்ற ஒன்று இல்லாதது தான் என்று, முன்னாள் ஊராட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். வார்டில் பணி நடக்கிறதா என்று அதிகாரிகளை யாரும் கேட்பதில்லை. மீறி கேட்டால், வேறு அதிகாரிகளை காரணம் காட்டி, சாக்குபோக்கு சொல்லி, பொறுப்பை தட்டிக் கழித்துவிடுவதாக, அவர்கள் கூறினர்.





