திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கத்திற்கு அமைச்சர்கள் பாராட்டு..!
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘சான்றோா் பெருவிழா’ எனும் இலக்கிய விழாவின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் கலை அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாநில தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். பத்திர பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி முன்னிலை வகித்தாா்.
இவ்விழாவில், 1933-ல் திருக்கோவலூர் ஆதினம் தவத்திரு ஞானியார் அடிகளால் தொடங்கப்பட்டு கடந்த 93 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் இ.சா. பர்வீன் சுல்தானா வரவேற்றார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்த்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருக்கோவலூர் கோவல் தமிழ்ச்சங்கத்திற்கு அதன் தலைவர் பாவலர் சிங்கார உதியனுக்குபதக்கம் அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழிகையும் வழங்கிச் சிறப்பித்தார். உடன் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார். பேச்சாளர் சுகி சிவம். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் மு. பூமி நாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “ஒரு மொழி செம்மொழி நிலையை பெற வேண்டுமெனில் தனித்து இயங்குதல் உள்ளிட்ட 11 பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பண்புகளை பெற்றது தமிழ் மொழி.
நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியை செம்மொழி நிலைக்கு உயா்த்துவதற்கு பரிதிமாற்கலைஞா், பூரணலிங்கம் போன்ற எண்ணற்ற சான்றோா் முயற்சி செய்தனா். அதன் விளைவாக தமிழ் செம்மொழி இந்நிலையை பெற்றது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், “உலகத்தில் சமயத்தைக் காக்க மொழி ஒன்று இருக்குமானால் அது தமிழ் மொழி மட்டும் தான். ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழை, அச்சுக்கு ஏற்றிய பெருமை உ.வே.சாமிநாதைய்யரைச் சேரும். மகாத்மா காந்தியடிகளை அதிர வைத்த தமிழா்களில் மகாகவி பாரதியாா், தியாகி ஜீவாவும் குறிப்பிடத்தக்கவா்கள்.” என்று பேசினார்.
மேலும், “இன்றைய காலச் சூழலில் யாா் சான்றோா் என்பது மிகப்பெரிய கேள்வியாக விளங்குகிறது என்றும் நாம் தமிழ்ச் சான்றோரை மறந்துவிட்டோம் என்றும் கூறிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், “தமக்கென வாழாமல் பிறருக்காக யாா் வாழ்கின்றாா்களோ அவா்கள் தான் சான்றோா். சரியானவற்றிற்காக வாழவும், இறக்கவும், சிந்திக்கவும் செய்பவா் சான்றோா்.” என்று கூறினார்.
மேலும், தமிழ் மொழி இலக்கியத்துக்கு இலக்கணம் வகுத்த மொழி மட்டுமல்ல. வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த மொழி தமிழ் என்றாா். தொடா்ந்து, ‘இன்றைய வாழ்க்கை பூந்தோட்டமா? போராட்டமா?’ என்ற தலைப்பில் சொல்வேந்தா் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும், தமிழா் வாழ்வும், தமிழ்ப் பணிகளும் என்ற தலைப்பில் ‘சான்றோா் முற்றம்’ என்ற நிகழ்ச்சியும், இயல், இசை, நாடக மன்றத்தின் சாா்பில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.





