--- --:--:-- --

திருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி கணவன்-மனைவி படுகாயம்: சைரன் சத்தத்துடன் வேலை ஆட்களை ஏற்றி வந்தது அம்பலம்!!

f99d1caf-1564-4931-b12c-609a9fef3513

திருப்பூர், குமார்நகர் 60 அடி சாலையில் நடந்த சோக சம்பவம் :சைரன் ஒலிக்க வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில்  கட்டிட தொழிலாளிகளான கணவன் மனைவி பலத்த காயம்  தனியார் மருத்துவமனைக்கு 10 க்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றி வந்தது அம்பலம்.டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

திருப்பூர், சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அம்சவேணி. இவரும் கட்டிட தொழிலாளி.  இருவரும் பாண்டியன் நகர் பகுதியில் கட்டிட வேலை முடிந்து தங்களுக்கு சொந்தமான 2  சக்கர வாகனத்தில் சிவன் தியேட்டர் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். சங்கர் ஓட்ட அவரது மனைவி பின்னால் உட்கார்ந்து வந்தார். குமார் நகரிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் 60 அடி சாலை சந்திப்பில் திருப்பூர் நுரையீரல் மருத்துவமனை முன்பு வந்து கொண்டு இருந்தபோது வேகமாக சைரன் சத்தத்துடன் வந்த ஆம்புலன்ஸ் இவர்கள் வந்த 2 சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.

இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே பொதுமக்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சங்கர் ஒட்டி வந்த வாகனமும் பலத்த சேதம் அடைந்தது. ஆம்புலன்சின் முன்பக்க கண்ணாடியும் முன்பகுதியும் நொறுங்கியது. அப்போது  சைரன் ஒலித்துவந்த ஆம்புலன்சில் நோயாளி இருப்பார்கள் என்று பொதுமக்கள் ஆம்புலன்ஸை பார்க்க  அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக  ஆம்புலன்சில் இருந்து 10 க்கும் மேற்பட்ட பெண்கள்  இறங்கி திருப்பூர் நுரையீரல் மருத்துவமனைக்குள் ஓடியுள்ளனர்.

 

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் என்னவென்று விசாரிக்க ஆம்புலன்ஸை ஓட்டிவந்தவர் மழுப்பலாகவும், அதிகாரதோரணையில் பேச பொதுமக்கள் மேலும் கோபம் அடைந்தனர். பின்னர் விசாரணையில் ஆம்புலன்சில் வந்தவர்கள் திருப்பூர் நுரையீரல் மருத்துவமனை மற்றும் அவர்கள் சார்ந்த சக்தி நர்சிங் ஹோம்  மருத்துவமனையை சேர்ந்தவர்கள் என்றும், வெளியில் தங்கி இருந்தவர்களை வேலைக்கு ஆம்புலன்சில் சைரன் போட்டு அழைத்துவருவதும், இது  தினமும் நடப்பதாகவும் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து ஆம்புலன்ஸை பொதுமக்கள் மறித்து போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். கொங்கு நகர் பகுதி போலீஸ் உதவி ஆணையர் அனில்குமார் உத்தரவின்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடந்ததினார். பின்னர் காயம்பட்ட சங்கர் மற்றும் அவனது மனைவிக்கு அந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

 

பின்னர் நோயாளியை மட்டும் அழைத்துவர உபயோகிக்கும் ஆம்புலன்சை முறைகேடாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் இர்பானை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தக்கசமயத்தில் ஆம்புலன்சின்  மோசமான நடவடிக்கையை கண்காணித்ததால் உண்மையான சம்பவம் அறியப்பட்டது.

 

இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதியாக கலைந்து  சென்றனர். இதேபோல் பல மருத்துவ மனைகளில் ஆட்களை அழைத்துவர இந்தமாதிரி நடப்பதாகவும் இதனை போலீசார் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Right Menu Icon