வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற 129 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
திருப்பூர், பெரியார் காலனி வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தினவிழா திருமுருகன்பூண்டி அருள்மிகு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.
வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை பொருளாளர் அண்ணாதுரை திருவள்ளுவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சி குழு செயலாளர் சிவசுப்பிரமணியம் குத்து விளக்கு ஏற்றினர்.
செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ருத்ரராஜ் அனைவரையும் வரவேற்றார். பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இளங்கோ அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அருணாச்சலம் கலந்து கொண்டு பேசினர்.

1330 திருக்குறளை மனனம் செய்து பன்முக கவனம் நிகழ்ச்சியில் சாதனை படைத்து வரும் கல்லூரி மாணவி ஓவியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார் விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் எழுத்துப் போட்டியில் பரிசு பெற்ற பெரியாயிபாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், அம்மாபாளையம் மற்றும் பெரியார் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி என 5 பள்ளிகளை சேர்ந்த 126 மாணவர்களுக்கு தங்கவேல், கனகசுப்பிரமண்யம், ராமகிருஷ்ணன், திருமூர்த்தி, தண்டபாணி, மதியரசன், செல்வம், சேதுமாதவன் உள்பட முக்கிய விருந்தினர்கள் சான்றிதழ் மற்றும் பணபரிசை வழங்கினர்.
தொடர்ந்து ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்ற அம்மாபாளையம் பள்ளி மாணவி பிரிசில்லாவுக்கு ரூ. 3000 ரொக்க பரிசும், அதேபோல் அம்மாபாளையம் பள்ளி மாணவி பூவிதாஸ்ரீ, பெரியார் காலனி பள்ளி மாணவி ஸ்ரீநிதா ஆகியோருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ. 1000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் அம்மாபாளையம், பெரியாயிபாளையம், இராக்கியப்பாளையம் ஆகிய 3 பள்ளிகளுக்கும், திருமுருகன்பூண்டி அங்கன்வாடி மையத்திற்கும் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள புதிய 4 பீரோக்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டது. முடிவில் வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார். முன்னதாக அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு தலைவர் மறைந்த சாமிநாதன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




