பேஸ்புக்கில் பெண்ணுக்கு காதல் வலை வீசிய காவலர்..!
சேலம் அருகே பேஸ்புக்கில் காதல் வலை வீசி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீஸ்காரர் மீது பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி.
இவருக்கு ஓமலூர் அருகே உள்ள அரியாம்பட்டியை சேர்ந்த சின்னகவுண்டர் என்பவருடன் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இவர்கள் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சின்னகவுன்டர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் வேலையை விட்டு விட்டு வந்துள்ளார் சின்ன கவுண்டர்.
ஆனால் அதன்பிறகும் கணவன்-மனைவிக்கு இடையே தொடர் பிரச்சினை ஏற்படவே உன்னுடன் இனி வாழ முடியாது எனக் கூறிய ஸ்ரீதேவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார் சின்ன கவுண்டர். இதனால் கோபமான ஸ்ரீதேவி உடனே ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் நடந்த விசாரணையின்போது சின்ன கவுண்டர் கடந்த அக்டோபர் மாதம் முதல் போலீஸ் வேலைக்கு செல்லாமல் இருப்பதும் தம்பிகளுடன் சேர்ந்து கொண்டு மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதும் தெரியவந்தது.
இதன் பேரில் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து ஏமாற்றியவர் என காவலர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.






