திருவண்ணாமலையில் தேர் திருவிழாவை மாடவீதிகளில் நடத்த உத்தரவிட முடியாது..!
திருவண்ணாமலை தேர்த்திருவிழாவை மாடவீதியில் நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத்திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த அரசுக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது தீபதிருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கோவிலுக்குள் தேர் திருவிழா நடத்தப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
உற்சவ மூர்த்திகள் ஊர்வலத்தையும் தேர்த் திருவிழாவையும் மாடவீதிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கொரொனா காரணமாக உற்சவ மூர்த்திகளின் ஊர்வலமும் தேர் திருவிழாவும் வளாகத்தில் நடத்தப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உற்சவர் ஊர்வலத்தையும் தேர்த் திருவிழாவையும் மாடவீதிகளில் நடத்துவது குறித்து உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.






