உச்ச நீதிமன்றத்தின் கிரீமி லேயர் தீர்ப்பு!
பல்வேறு குடிமைப் பணிகளில் நுழைவதற்கோ அல்லது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயரிய பணிகளுக்குப் பதவி உயர்வு பெறுவதற்கோ கதவுகளைத் திறந்துவிட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் பயனடையவுள்ள சுமார் 140 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (ஓ.பி.சி), அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எழுத்தர்களின் பிள்ளைகளே பெரும்பான்மையாக உள்ளனர் என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வு காட்டுகிறது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேல் இருந்ததால், இவர்கள் “கிரீமி லேயர்” (வளர்ந்த பிரிவினர்) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, 2016-ம் ஆண்டு முதல் இவர்களது ஓ.பி.சி சான்றிதழ்களை அரசு பெரும்பாலும் நிராகரித்து வந்தது. இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களில் பெற்றோர் பணிபுரியும் வழக்குகளில், சம்பளம் அல்லது வருமானத்தை மட்டுமே வைத்து கிரீமி லேயர் நிலையைத் தீர்மானிக்க முடியாது என்றும், பதவியின் தகுதி மற்றும் பிரிவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்றும் மார்ச் 11-ல் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நவம்பர் 6-ம் தேதி மீண்டும் உறுதி செய்தது.
இந்தப் பிரிவைச் சேர்ந்த 84 ஓ.பி.சி தேர்வர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களில் பலரது ஆவணங்களை ஆய்வு செய்தும், சிலரிடம் பேசியும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திரட்டிய தகவல்களின்படி, இந்த உத்தரவு யாருக்காகக் கொண்டுவரப்பட்டதோ அவர்களுக்கே முக்கியமாகப் பயனளிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த 84 தேர்வர்களில் (66 ஆண்கள், 18 பெண்கள்), 31 பேர் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், 26 பேர் அரசு எழுத்தர்களின் பிள்ளைகள் மற்றும் 22 பேர் அரசு நிறுவனங்களில் மேலாண்மைப் பணியாளர்களின் பிள்ளைகள் ஆவர். இவர்கள் மொத்தம் 79 தேர்வர்கள். மற்ற ஐந்து பேரின் பெற்றோர் தனியார் துறையில் பணிபுரிகின்றனர்.
இந்த 84 பேரில் பெரும்பாலானோர் 2016 மற்றும் அதற்கு முந்தைய சில ஆண்டுகளில் நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (சி.எஸ்.இ) ஓ.பி.சி பிரிவின் கீழ் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் “கிரீமி லேயர்” பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டவுடன், இவர்களது தேர்வு நிராகரிக்கப்பட்டது அல்லது இவர்களது தரவரிசை குறைக்கப்பட்டு வேறு பணிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தத் தேர்வர்கள் பல்வேறு ஓ.பி.சி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்; முக்கியமாக குர்மி/குன்பி (நான்கு மாநிலங்களிலிருந்து 16 பேர்), யாதவ் (ஐந்து மாநிலங்களிலிருந்து 9 பேர்), குஜ்ஜார் (இரண்டு மாநிலங்களிலிருந்து 2 பேர்) மற்றும் ஜாட் (பரத்பூர் மற்றும் தோல்பூர் தவிர ராஜஸ்தானில் மத்திய ஓ.பி.சி பட்டியலில் உள்ளவர்கள் 4 பேர்) உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
மாநில வாரியான ஆய்வில், மகாராஷ்டிரா 16 தேர்வர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (11), ஹரியானா (8), பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் (தலா 7), மற்றும் கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு (தலா 6) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவர்களில் 7 பேர் 2015-ம் ஆண்டு தேர்வர்கள், 8 பேர் 2016, 11 பேர் 2017, ஒருவர் 2018, 2 பேர் 2019, 2 பேர் 2020, 6 பேர் 2021, 8 பேர் 2022, 13 பேர் 2023 மற்றும் 8 பேர் 2024-ம் ஆண்டு தேர்வர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 1980-களின் நடுப்பகுதிக்கும் 1990-களின் பிற்பகுதிக்கும் இடையில் பிறந்தவர்கள்.
சுமார் 140 தேர்வர்களில் 56 பேர், மார்ச் 11-ல் உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்டு நவம்பர் 6-ம் தேதி உறுதி செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்களாக இருந்துள்ளனர் என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. மேலும் பலரது வழக்குகள் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (சி.ஏ.டி) போன்ற பல்வேறு மன்றங்களில் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த தரவுகளின்படி, இந்த 56 பேரில் குறைந்தபட்சம் 38 பேர் கிரீமி லேயர் நிர்ணயத்திற்குப் பிறகு ஒதுக்கப்பட்ட குறைந்த தரவரிசை கொண்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டவுடன், அவர்கள் உயர்ந்த தரவரிசைக்கு உயர்த்தப்பட்டு வேறு பணிகள் ஒதுக்கப்படுவார்கள். உதாரணமாக, சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஏ.எஸ் பணிக்கும், சில ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் பணிக்கும் மாறுவார்கள் – சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வேறு மாநிலப் பிரிவுகளும் ஒதுக்கப்படும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர், “எனது தரவரிசை குறைக்கப்பட்டபோது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். இப்போது எனக்கு ஐ.ஏ.எஸ் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 2017-ல் பணி ஒதுக்கீடு மறுக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுப் பணியில் (ஐ.எஃப்.எஸ்) சேர்ந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு தேர்வர் கூறுகையில்: “நான் முதல் முறையாகத் தேர்வில் தேர்ச்சியே பெறவில்லை என்று எனது அக்கம்பக்கத்தினர் மற்றும் சமூக வட்டாரங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. எனது பெற்றோர் வெளியே செல்லும்போதெல்லாம் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் எனது தந்தையின் சக ஊழியர்களிடமிருந்து ஏளனத்தையும், கேலியையும், மறைமுகக் குத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த வதந்திகள் வலுப்பெற்ற பிறகு, நிச்சயிக்கப்படவிருந்த எனது திருமணம் கூட நின்று போனது” என்றார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதன் மூலம், 2025-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 958 தேர்வர்களுக்கான பணி ஒதுக்கீடு, பயிற்சி மற்றும் பணியமர்த்தலும், இந்திய வனப் பணித் தேர்வில் (ஐ.எஃப்.எஸ்) தேர்ச்சி பெற்ற 148 தேர்வர்களுக்கான பயிற்சியும் சாத்தியமாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




