அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நவ.16ல் விடுமுறை..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் வரை புகழ்பெற்ற மயிலாடுதுறை துலா உற்சவத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.அதன்படி இந்த வருடத்துக்கான ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வருகிற நவ.16ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நவம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ள கடைமுக தீர்த்தவாரிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அன்றைய நாள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. எனினும், இவ்விடுமுறை உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881) இதன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் ஆட்சியர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இம்மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




