சாத்தான்குளத்தில் வீடு புகுந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர்கள் முத்துக்கிருஷ்ணன் – மேரி விஜிலா தம்பதி. இவர்களுக்கு 15 மற்றும் 13 வயதில் இரண்டு பெண் பிள்ளைகளும், 10 வயதில் ஒரு ஆண் மகனும் உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை இவர்களது வீட்டிற்குள் புகுந்த ஞானபிரகாஷ் என்ற இளைஞர், குடும்பத்தினர் அனைவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கிறார்.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸெட் ராஜா ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். கொலை செய்த ஞானபிரகாஷ், வீட்டில் இருந்த 15 மற்றும் 13 வயதான இரு சிறுமிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் விரைந்து சென்று மேரி விஜிலாவின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்திருந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸெட் ராஜா ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி இரு சிறுமிகளையும் அழைத்துச் சென்றதால், அவர்களுக்கு என்ன ஆனது என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது. உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையாளி ஞானபிரகாஷை கைது செய்தனர். மேலும், அவரது பிடியில் இருந்த இரண்டு சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். தட்டார்மடம் போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானபிரகாஷ், முத்துக்கிருஷ்ணன் – மேரி விஜிலா தம்பதியின் மூத்த மகளைக் காதலித்து இருக்கிறார். மகளின் காதல் விவகாரத்தை அறிந்த முத்துக்கிருஷ்ணன் – மேரி விஜிலா தம்பதி, மகளைக் கண்டித்து அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துவிட்டனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஞானபிரகாஷுக்கும், முத்துக்கிருஷ்ணன் – மேரி விஜிலா தம்பதிக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் செல்போன் பறிக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களாக சிறுமியுடன் பேசாமல் இருந்த ஞானபிரகாஷ், திடீரென ஆத்திரமடைந்து நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார். பின்னர் தான் காதலித்த மைனர் பெண்ணையும் அவரது தங்கையையும் தன்னுடன் அழைத்து வந்து தனது வீட்டிலேயே தங்க வைத்து இருக்கிறார்.
சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஞானபிரகாஷை கைது செய்த போலீசார், அவர் அழைத்துச் சென்ற இரு சிறுமிகளையும், கொலையாளியின் வீட்டில் இருந்து மீட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மைனர் பெண் காதல் விவகாரத்தில் அவரது தாய் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





