ஐ.ஜி ராதிகா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!
தமிழக காவல்துறையில் ஐஜி நிலையில் முக்கிய மாற்றங்களைச் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் ஏ. கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஐஜியாக பணியாற்றி வந்த ஏ. ராதிகா ஐபிஎஸ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இருந்த என். காமினி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், ராதிகாவுக்கு புதிய பணியிடம் எதுவும் உடனடியாக வழங்கப்படாமல், அவர் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக ராதிகா பணியாற்றிய காலத்தில், ‘ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணியின் போக்சோ வழக்கில் காவல்துறையினர் முடித்தல் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்தச் சமயத்தில் ராதிகா விடுப்பில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அவரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசு உத்தரவின்படி, திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இருந்த என். காமினி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜியாகப் பொறுப்பேற்கவுள்ளார். மேலும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா, திருச்சி மாநகரக் காவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள சந்தோஷ் குமார், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜியாகக் கூடுதல் பொறுப்பு/மாற்றம் பெற்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





