--- --:--:-- --

திருச்சி சாலையில் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

11

மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்கக் கோரி, திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரிகள், கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை மற்றும் வழக்குகளுக்குப் பிறகு தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மணல் தடையின்றி கிடைக்காமல், ஏறத்தாழ 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

இதனை வலியுறுத்தி, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று கவன ஈர்ப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செல்ல ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் கலந்துகொண்டு பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:மணல் குவாரிகளைத் திறக்கக் கூடாது என எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனுக்கள் அனுப்பியும், அமைச்சர்களை நேரில் சந்தித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தைக்கும் அழைக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்படுகின்றனர்.

 

 

துறையின் அமைச்சரோ அல்லது செயலாளரோ நேரில் வந்து உரிய உத்தரவாதம் அளிக்கும் வரை இந்தத் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் உடனடியாக தலையிட்டு மணல் குவாரிகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மணல் குவாரிகளைத் திறக்கக் கோரி லாரி உரிமையாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. – க. சண்முகவடிவேல்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon