நவராத்திரி கொண்டாட்டங்களில் விதிமீறல் நடந்தால் நடவடிக்கை!
நவராத்திரி கொண்டாட்டங்கள் பொழுதுபோக்கு அல்லது கேலிக்கூத்து நிகழ்ச்சியாகவோ, சினிமா பாடல்களுடன் கூடிய நடன நிகழ்ச்சியாகவோ நடத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாரத் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கே.டில்லிபாபு தாக்கல் செய்துள்ள வழக்கில், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் தெய்வ வழிபாடான நவராத்திரி பண்டிகையின்போது, முப்பெரும் தேவியரின் கதைகளை பாடலாகவும், நடன இசையோடு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசேர்க்கப்படுகிறது.
ஆனால், தற்போது கலாச்சார சீரழிவாக, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு, சென்னையில் உள்ள தனியார் விடுதிகளில் நவராத்திரி பூஜைகள் கொண்டாடப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், கடந்த ஆண்டு குஜராத்தை சேர்ந்த நிறுவனம் துர்கா தேவி சிலையை வைத்து சினிமா பாடலுடன் நடன நிகழ்ச்சிகள் நடத்தியது. இந்த ஆண்டுகும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஹிப் ஹாப் பாடல்கள் மற்றும் பாலிவுட் ஐட்டம் பாடல்களை ஒலிபரப்பி ஒரு ரேவ் பார்ட்டியை நடத்துகின்றனர்.இளைஞர்கள் மதுபானத்தைக் கொண்டுவருவதன் மூலம் மத புனிதத்தை பாதிக்கின்றனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்து தர்மத்திற்கு எதிராக நிகழ்ச்சி நடத்தினால் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் காவல்துறையிடம் அக்டோபர் 12ஆம் தேதி மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா மற்றும் தாண்டியா நடனங்கள் ஓர் அங்கமாக இருந்தாலும், அதில் இசைக்கப்படும் பாடல்களின் தன்மை மற்றும் மதுபானம் பரிமாறப்படுவதை அனுமதிக்கும்ப்ட்சத்தில், காவல்துறை வழங்கிய அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, காவல்துறை விதித்த நிபந்தனைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





