--- --:--:-- --

கோவை நூலகம் திறப்பு – ஸ்டாலின் கேள்வி

5

கோவை பெரியார் அறிவுலகம் இன்று திறக்கப்படவுள்ளதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசு குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்துவைப்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் விஜய் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.

 

அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முதலமைச்சர், பெரியாரின் திருவுருவச் சிலையினை திறந்துவைக்கிறார். பின்னர், நண்பகல் 12 மணியளவில் பெரியார் அறிவுலக கல்வெட்டை திறந்து வைக்கும் முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலகத்தில் உள்ள தளங்களில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகளுக்கான நூலகம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவற்றை பார்வையிடுகிறார்.

 

 

இதற்கிடையே, கோவை பெரியார் நூலகம் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள அறிக்கையில், “ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திமுக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று திமுகவினர் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

 

 

நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம்.

 

ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் நூலகத்தில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம்.

 

 

தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி. நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும். அதை நிறைவேற்றுவதில், திமுக அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon