கூகுள் மேப்பை நம்பி சந்துக்குள் சென்று வசமாக சிக்கிய கார்!
கன்னியாகுமரியில் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி சென்ற கார் குறுகலான பாதைக்குள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரளாவில் இருந்து குலசேகரம் நோக்கி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், கடுமையான மதுபோதையில் கூகுள் மேப்பை நம்பி காரை இயக்கி உள்ளனர். மேல்புறம் செம்மங்காலை பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய மிகக் குறுகலான பாதையில் புகுந்த கார், சுவர்களில் மாட்டித் திணறியது.
காரை முன்னோக்கியும் பின்னோக்கியும் எடுக்க முடியாமல் நான்கு பேரும் தவித்து வந்துள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் உடனே ஓடிவந்து உதவி காரை தள்ளியே பத்திரமாக வெளியே எடுத்தனர். இதற்கிடையே தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் நிலைமையை ஆய்வு செய்தனர்.
ஆனால், தங்களைக் காப்பாற்றிய பொதுமக்களுக்கு நன்றி சொல்லக் கூடத் தோன்றாமல், காவல்துறையினர் பிடித்துவிடுவார்களோ அல்லது காம்பவுண்ட் சுவர் சேதத்திற்கு நஷ்ட ஈடு கேட்கப் போகிறார்கள் என்ற பயத்தில், காருடன் மதுபோதையில் இருந்த நான்கு பேர் அங்கிருந்து அதிவேகமாகத் தப்பிச் சென்றனர். மதுபோதையில் கண்மூடித்தனமான காரை இயக்கி தப்பி சென்றவர்கள் குறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




