--- --:--:-- --

7 வயது சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் 4 ஆவது நாளாக காவல்துறையினர் திணறல்

7

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கடந்த 12-ஆம் தேதி அதிகாலை காணாமல் போன 7 வயது சிறுமியை நான்காவது நாளாக காவல்துறையினர் தேடி வரும் நிலையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் திணறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான வடிவேலு-பவானி தம்பதிகளின் 7 வயது மகள் அரசு தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

 

 

இவருக்கு கடந்த 11-ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் இரவு வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். இதைத்தொடர்ந்து வீட்டில் பெற்றோர்களுடன் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை எழுந்து பார்த்தபோது சிறுமி காணாமல் போனதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலை 3 மணி முதல் குழந்தையைக் காணவில்லை என்பதால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

 

 

இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பல்வேறு பகுதிகளில் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சிறுமியை தேடும் பணியில் டிரோன் கேமரா மற்றும் மோப்பநாய் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனிடையே 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நான்கு நாட்களாக காவல்துறையின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், துப்பு கிடைக்காததால் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோரிடம் தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் நான்காவது நாளாகத் தனிப்படை காவலர்கள் சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுமியை நோட்டமிட்டு யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என்பதால் அந்த கோணத்திலும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon