--- --:--:-- --

அதிமுகவை மீட்டெடுக்க இது ஒன்றுதான் வழி.. நாங்கள் தயாராக இருக்கிறோம் – சி.வி. சண்முகம்

5

அதிமுக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்தை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்தனர். இதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி, அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தாலும், தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவருவதாகவே சொல்லப்படுகிறது.

 

அதேசயம், சி.வி. சண்முகம் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருந்துவருகிறார். இதற்கிடையில் இரண்டு தொகுதிகள் இடைத் தேர்தலிலும், அதிமுக வென்ற இடத்திலேயே மூன்றாம் இடத்தை அடைந்த நிலையில் மீண்டும் அதிருப்தி அணியின் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

அந்த வகையில் இன்று சி.வி. சண்முகம், எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் தனது வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்படும்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அதிமுகவில் நான் அதிருப்தியில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதில் எதுவும் புதிய செய்தி இல்லை. இடைத்தேர்தலில் அதிமுக மோசமான தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணத்தை கலந்து ஆலோசித்து சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சொல்கிறோம்.

 

 

அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்தால் கட்சியை மீட்டு எடுக்கலாம். அதிமுகவில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. பொறுப்பில் இருப்பவர்கள் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முடிவு எடுத்தால் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.

 

இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற காரணம் என்ன என்று பத்திரிகையாளர்களுக்கு தெரியும். இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை இது ஒரு நல்ல மாற்றம்; இதனை வரவேற்கிறேன். அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தது மன வருத்தம் அளிக்கிறது. எல்லோரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தினால், அதிமுக மீண்டு வரும் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon