திடீரென முடங்கிய சாட் ஜிபிடி..!
மதிய வேளையில், உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் புகழ்பெற்ற ஏ.ஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி திடீரென செயலாக்கமின்றி முடங்கிப்போனது. சேவை கோளாறுகள் கண்காணிக்கும் டவுண்டெக்டார் தளத்தில் பிற்பகல் 2:54 மணி அளவில் புகார்கள் திடீரெனப் பாய்ந்தன.
வழக்கமாக 2 புகார்கள் மட்டுமே பதிவாகும் நிலையில், கண்மூடித் திறப்பதற்குள் புகார்களின் எண்ணிக்கை 1,560-க்கும் மேலாக எகிறியது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது மனிதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட சிக்கலல்ல; உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த மிகப்பெரிய டிஜிட்டல் முடக்கம் என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் பளிச்சென்று உணர்த்தின.
மொபைல் செயலி மற்றும் இணையதளம் ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் ஸ்தம்பித்ததால், கணக்கை லாக்-இன் செய்ய முடியாமலும், எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாமலும், சாட்பாட்டின் முதன்மை சேவைகளைப் பயன்படுத்த முடியாமலும் பயனர்கள் தவித்தனர். உடனே பலரும் டவுண்டெக்டார் மற்றும் சமூக வலைத்தளங்களை நோக்கிப் படையெடுத்து தங்களது புலம்பல்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.
டவுண்டெக்டார் வெளியிட்ட பரபரப்பு புள்ளிவிவரங்களின்படி 80% புகார்கள் நேரடியாக சாட்ஜிபிடி முடக்கம் சார்ந்தவை. 8% புகார்கள் அதன் மொபைல் செயலியைப் பயன்படுத்த முடியாததால் எழுந்தவை. 6% புகார்கள் ஏ.பி.ஐ (API) தொடர்பான கோளாறுகள். அவ்வளவு ஏன், லாக்-இன் சிக்கல்கள் மட்டுமின்றி ஓபன் ஏ.ஐ-ன் பிற பிரபலமான சேவைகளான Dall-E, Sora, Codex மற்றும் வெப் பிரவுசர் மூலம் அணுகும் வசதி வரை அனைத்துமே பாதிக்கப்பட்டன. இதன் மூலம் ஓபன் ஏ.ஐ-ன் ஒட்டுமொத்தத் தயாரிப்புச் சூழலையும் இந்த முடக்கம் தொட்டுச் சென்றுள்ளது என்பது தெளிவானது.
பேங்க் மேனேஜரை கன்னத்தில் அறைந்த மு.க.அழகிரி மகள்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஓபன் ஏ.ஐ சொல்வது என்ன? இந்த சம்பவத்திற்குப் பிறகு ஓபன் ஏ.ஐ தனது அதிகாரப்பூர்வ நிலைப் பக்கத்தில் (Status Page), இந்தச் சிக்கலை உயர்ந்த பிழை விகிதங்கள் (Elevated error rates) எனக் குறிப்பிட்டு, தங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் இதைச் சரிசெய்யும் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சேவை முடக்கத்தில் APIs, ChatGPT மற்றும் Codex சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களின் இயக்க நேரத்தைப் (Uptime) பொறுத்தவரை சாட்ஜிபிடி 99.66%, ஏ.பி.ஐ.எஸ் 99.93%, கோடெக்ஸ் 99.98% எனச் சீராக இயங்கி வந்த நிலையில், இந்த திடீர் முடக்கம் ஒரு விதிவிலக்கான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளையில், FedRAMP மற்றும் விளம்பரத் தளம் (Ads Platform) போன்ற OpenAI-ன் பிற சேவைகள் எந்தப் பாதிப்பும் இன்றித் தொடர்ந்து சீராக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






