அடையார் மண்டலத்தில் புதிய திட்டம் தொடங்கிய சென்னை மெட்ரோ வாட்டர்..!
சென்னை மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மற்றும் சமமான குடிநீர் விநியோகத்தை வழங்கும் இலக்கை நோக்கி சென்னை குடிநீர் வாரியம் (Metrowater) அடுத்தகட்டமாக நகர்ந்துள்ளது. இதற்காக, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அடையாறு மண்டலத்தின் கூடுதல் பகுதிகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) வாரியம் இறுதி செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம், பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் நீர் விநியோக நிலையங்களின் கீழ் வரும் பெசன்ட் நகர், அடையாறு, தரமணி மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து அடையாறு மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களின் இதர பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தின் ஒரு வார்டில் இதற்கான முன்னோடித் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஒடிசா குடிநீர் கழகத்தின் (WATCO) ஆய்வின் அடிப்படையில் இந்த இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்படும். இது ‘ஹைபிரிட் அன்யூட்டி மாடல்’ (Hybrid Annuity Model) எனும் பொது-தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் அமையும். இதன் மூலம் வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் நந்தனம் ஆகிய மூன்று குடிநீர் விநியோக நிலையங்களும், விநியோகக் குழாய் அமைப்புகளும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட நேர விநியோக முறை மாற்றப்பட்டு, தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படும்.
விநியோகக் கட்டமைப்பு ‘மாவட்ட அளவீட்டு பகுதிகளாக’ (District Metered Areas – DMA) பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் ஓட்டம் மற்றும் அழுத்தத்தை கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு, நீர் இழப்பு குறைக்கப்படும். ஒரு டி.எம்.ஏ. (DMA) சுமார் 3,000 இணைப்புகளைக் கொண்டிருக்கும். வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நீர் அளவீட்டு கருவிகள் மற்றும் எல்.ஒ.டி (IoT) சார்ந்த நிகழ்நேர தரவு கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கடைசி நிலையில் (tail-end) உள்ள வீடுகளுக்கும் சமமான நீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
சமீபத்தில் 175, 176 மற்றும் 177 ஆகிய வார்டுகளில் வசிப்பவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அடையாறு மண்டலத்திற்கு தற்போது வழங்கப்படும் 95 மில்லியன் லிட்டர் (mld) நீர், இத்திட்டம் முடிந்த பிறகு 140 மில்லியன் லிட்டராக உயர்த்தப்படும். வேளச்சேரிக்கு வழங்கப்படும் நீரின் அளவை 12 mld-லிருந்து 20 mld-ஆக உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
இது குறித்து ஏ.ஜி.எஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் கூறுகையில், நகரமயமாக்கல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், பழைய சேதமடைந்த குழாய்களை மாற்ற வேண்டும் என்றும், கழிவுநீர் கசிவுப் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதிகாரிகள் தரப்பில், உள்கட்டமைப்பு நிலை மதிப்பீட்டின் அடிப்படையில் குழாய்கள் மேம்படுத்தப்படும் என்றும், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிய மண்டலம் முழுவதும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





