இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியது.
அதன் மூலம் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.44 கோடியாக குறைந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 10ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரி சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மதியம் 2.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வாக்காளர் பட்டியலை வெளியிடவுள்ளார். தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.





