விலகியது வடகிழக்கு பருவமழை.. 3 நாட்களுக்கு மழை..!
வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 23 முதல் 25ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி – இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.






