--- --:--:-- --

தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என கூறுவதா? – சீமானுக்கு நீதிபதி கண்டனம்

2

தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்று கூறுவது, அரசியல் கட்சிக்கு அழகல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது.
கடந்த முறை அனுமதி கோரிய போது, சிவகங்கையில் கண்டதேவி கோயில் தேரோட்டம் நடைபெற இருந்ததால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக போராட்டத்திற்கு இசைவு தெரிவிக்கவில்லை என நீதிபதி புகழேந்தி கூறினார்.

 

ஆனால், தடையை மீறி போராட்டம் நடத்துவதாகக் கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என்றும், இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்தது. சாதாரண குடிமகன் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

 

போராட்டம் நடத்துவதற்கும், மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் அரசியல் கட்சிக்கு உரிமை உண்டு எனக் கூறிய நீதிபதி, அதே சமயம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், அவர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அரசியல் கட்சியின் கடமை என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon