--- --:--:-- --

வெளியான நீட் தேர்வு முடிவுகள்.. 6 தமிழ்நாட்டு மாணவர்கள் அசத்தல்..!

2

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

 

இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்விற்கு மொத்தம் 22,76,069 பேர் பதிவு செய்தனர். அதில் 22,09,318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 12,36,531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 5,14,063 பேர் ஆண்கள், 7,22,462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.இதில் இந்திய அளவில் 99.9999547 சதவீத மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

மேலும், இந்திய அளவில் முதல் 100 இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் வந்துள்ளனர். அதேநேரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவி கூட முதல் நூறு இடங்களுக்குள் இடம் பெறவில்லை.அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 27வது இடத்தையும் பிடித்துள்ளார்.

 

மற்றொரு தமிழ்நாடு மாணவர் அபிநித் நாகராஜ் இந்திய அளவில் 50வது இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து இந்திய அளவில் புகழேந்தி 61, ஹிருதிக் விஜய் ராஜா 63, ராகேஷ் 78, பிரஜன் ஸ்ரீவாரி 88ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon