காளையை அடக்கினால் ரூ.200..10ம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக பலி..!
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கினால் ரூ.200 தருகிறேன் என காளை உரிமையாளர் கூறியதை நம்பி கட்டிய மாட்டை அடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன் தஞ்சை மாவட்டத்தில் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து தீரன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தால் அப்பொழுது பள்ளி அருகே வெட்டவெளியில் நின்று கொண்டிருந்த மாட்டை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்பொழுது மாடு அவருடைய நெஞ்சில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த மாணவர் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் செல்லும் வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாணவனின் உறவினர்கள் கூறுகையில் அந்த பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் மாணவர்களிடம் மாட்டை அடக்கினால் ரூ.200 தருகிறேன் எனக் கூறியதாக தெரிகிறது.
பணத்திற்கு ஆசைப்பட்டு மாணவன் காளையை அடக்க முயன்ற பொழுதே இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. எனவே உயிர் போக காரணமான ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





