--- --:--:-- --

வைகை ஆறு மாசடைவதை தடுக்க உத்தரவு..!

ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகள் இருப்பது போல் அடிப்படை கடமைகளும் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. வைகை ஆற்றில் இருந்து ஆதனூர் கண்மாய்க்கு தண்ணீரை திறந்து விடக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சமீது முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அரசு தரப்பில் மதுரை வைகை ஆற்றின் கரையோரம் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் குடியிருப்போர் வைகை ஆற்றில் கழிவுகளை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பது போல் அடிப்படை கடமைகளும் இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

 

வைகை ஆற்றில் வாகனங்களை நிறுத்தி சுத்தம் செய்வதையும் குப்பை கொட்டுவரையும் தானே நேரில் பார்த்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசுபடாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா என அவர் கேள்வி எழுப்பினார்.

 

வைகை ஆற்றில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க மதுரை மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இயற்கை வளங்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரரின் மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon