குறுக்கே வந்த நாயினால் ஏற்பட்ட விபத்து..!
குறுக்கே வந்த நாயினால் ஆட்டோ விபத்திற்கு உள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை திருநின்றவூர் புது சித்திரப் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்.
இவர் புட்லூர் கோயிலில் தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனது தாயாருடன் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருநின்றவூர் அருகே ஆட்டோ வந்த பொழுது நாய் ஒன்று திடீரென சாலையில் ஓடிவந்தது.
நாயின் மீது ஆட்டோ மோதி விடக்கூடாது என்பதற்காக கார்த்திக் சட்டென்று பிரேக் அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பின் சக்கரம் தூக்கிய படி சென்று சாலை தடுப்பு சுவரில் வேகமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்து அப்பளம் போல் நொறுங்கியதுடன் ஓட்டுனர் கார்த்திக் படுகாயம் அடைந்தார்.
மேலும் பின்னால் அமர்ந்திருந்த அவரது தாய்க்கும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காட்சிகள் அருகில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.





