ரூ.6,000 நிவாரண நிதி இன்று முதல் விநியோகம்..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைக்கிறார். மிக்ஜாம் புயலையொட்டி பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இதில், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து, நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக வீடுவீடாக சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
டோக்கன்கள் கிடைக்கப் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு சென்று நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளளாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வேளச்சேரி பகுதியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில், இன்று காலை 10 மணிக்கு நிவாரணம் வழங்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து மற்ற நியாய விலைக் கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், அடுத்து வரும் நாட்களிலும் நியாய விலைக் கடைகளில் காலை 9 முதல் நண்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் அதை பெறுவதற்கான படிவமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





